ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலம் உதவிய நண்பர் கடவுள் மாதிரி ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ - சேலம் நடராஜன் பூரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலம் உதவிய நண்பர் கடவுள் மாதிரி ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’  சேலம் நடராஜன் பூரிப்பு

ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போதும் நிறைய ஆச்சரியங்களை காண முடியும். 2017ம் ஆண்டு சீசனுக்காக நேற்று நடந்த ஐபிஎல் ஏலமும் அப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததாகதான் இருந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்.

25 வயதாகும் நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர். தந்தை தங்கராஜ் தினக்கூலி.

தாய் சாந்தா டீக்கடை நடத்தி வருகிறார். தனது தாய்க்கு உதவுவதற்காக பல முறை வகுப்புகளை கூட நடராஜன் புறக்கணித்துள்ளார்.

‘இது உண்மையா? அல்லது கற்பனையா? என தெரியவில்லை’ என்று ஐபிஎல் தொடருக்கு மிக அதிக தொகைக்கு தேர்வானது குறித்து கூறுகிறார் நடராஜன்.

இவரது அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது வெறும் ரூ. 10 லட்சம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் டென்னிஸ் பந்தில்தான் நடராஜன் கிரிக்கெட் விளையாடி வந்தார். சுற்று வட்டார பகுதிகளின் டென்னிஸ் பந்து ஹீரோவாக அவர் திகழ்ந்தார்.

இதன்பின் அவரது நண்பரும், முன்னாள் நான்காவது டிவிஷன் வீரருமான ஜெயப்பிரகாஷ்தான் லெதர் பந்தை அவருக்கு கொடுத்துள்ளார். ‘எனக்கு 18 அல்லது 19 வயதிருக்கும்.

அப்போது ஜெயப்பிரகாஷ் என்னிடம் புதிய பிராண்டு லெதர் பந்தை கொடுத்து, அதில் பந்து வீசும்படி தெரிவித்தார். இதனால் எந்த பலனும் இல்லை.

கிரிக்கெட் வீரராவேன் என நான் நினைக்கவில்லை என அவரிடம் கூறினேன். ஆனால் எனது கண்களை உற்றுப்பார்த்த ஜெயப்பிரகாஷ் இந்த பந்துடன் நான் பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பேன் என கூறினார்’ எனும் நடராஜன், உண்மையில் இன்று பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து விட்டார்.



நடராஜனுக்கு 20 வயதாக இருக்கும்போது, ஒரு ஜோடி ஷு, சென்னைக்கான ரயில் டிக்கெட், திருவள்ளூரில் நான்காம் டிவிஷன் கிளப் நடத்தி வந்த தனது நண்பரின் தொடர்பு எண் ஆகியவற்றை கொடுத்து அனுப்பி வைத்தவர் ஜெயப்பிரகாஷ்தான். 2 ஆண்டுகளுக்குள்ளாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கின் முன்னணி அணிகளில் ஒன்றான ஜாலி ரோவர்ஸ் அணிக்காக பந்து வீசினார் நடராஜன்.

அதன்பின் ரஞ்சி டிராபி உத்தேச பட்டியலிலும் இடம் பெற்றார். 2015ம் ஆண்டு புத்தாண்டு அவருக்கு மகிழ்ச்சியான செய்தியுடன் பிறந்தது.

ஏனெனில் மாநில அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அடுத்த 5 நாட்களில் பெங்கால் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடராஜன் அறிமுகமானார்.

ஆனால் அந்த சமயத்தில் அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதாக புகார் எழுந்தது. ‘சக வீரர்கள் என்னை ஆறுதல்படுத்தினர்.



எனினும் வீடு திரும்பி எனது பெற்றோருக்கு உதவி செய்யலாம் என முடிவெடுத்து விட்டேன். அந்த நேரத்தில் ஜாலி ரோவர்ஸ் பயிற்சியாளர் பாரத் ரெட்டி என்னை தடுத்து நிறுத்தினார்.

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு கூட சந்தேகப்படப்பட்டதுதான். ஆனால் இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார்? என அவர் என்னிடம் கூறினார்.

இந்த வார்த்தைகள்தான் எனக்கு ஊக்கம் அளித்தது. இதனால் நான் போராட முயற்சி செய்தேன்’ என்கிறார் நடராஜன்.

அதற்கு ஏற்ப பந்து வீச்சு முறைகளில் மாற்றமும் செய்தார். தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் (டிஎன்பிஎல்) திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்தார். தமிழ்நாடு அணிக்கு அவர் திரும்ப இது வழிவகுத்தது.

2016-17 உள்ளூர் சீசனில் அவர் 8 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசும் இவர், தமிழ்நாட்டின் முஸ்டாபைஜூர் ரகுமான் என வர்ணிக்கப்படுகிறார்.



இந்த சாதனைகளுக்கு உதவியதாக அவர் குறிப்பிடுவது நண்பர் ஜெயபிரகாஷைதான். ‘அவர் என் கடவுள் மாதிரி.


தற்போது எனது தந்தை வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. எனது தாயும் தினசரி டீக்கடைக்கு செல்ல வேண்டியதில்லை.

எனது சகோதரர்கள் (இவருடன் உடன்பிறந்தவர்கள் 4 பேர்) நல்ல பள்ளிக்கு செல்ல முடியும் என பூரிப்புடன் கூறுகிறார்’ நடராஜன். மகனின் சாதனை குறித்து தாய் சாந்தா கூறுகையில், ‘கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய நடராஜனுக்கு சரியான நேரத்துக்கு எங்களால் சாப்பாடு கூட கொடுக்க முடியாது.

எனினும் கிரிக்கெட் மீது கொண்டிருந்த தணியாத தாகத்ததால் சிறப்பாக விளையாடினார்’ என்றார்.


.

மூலக்கதை