கமல் ஹாஸன் சந்தர்ப்பவாதியா... போராளியா? ஒரு அலசல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கமல் ஹாஸன் சந்தர்ப்பவாதியா... போராளியா? ஒரு அலசல்!

உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ் சினிமாவின் முகமாக அடையாளம் காணப்பட்டவர் கமலஹாசன்.

உலக சினிமா தயாரிப்புகளில் புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றபோது அதனை இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் நடிகர் கமலஹாசன். அப்போது கமலஹாசன் சினிமாகாரர்களின் ஏளனத்திற்கும், எள்ளி நகையாடலுக்கும் ஆளானதுண்டு. ஆனால் அதை பற்றி எப்போதும் எந்த நிலையிலும் பின்வாங்காத போராளியாக செயல்பட்டவர் கமலஹாசன். அவர் செய்ததே சரி என்று பின்னர் காலம் உணர்த்தியுள்ளது.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் அவர் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் தொழில் நுட்பம்தான் இந்திய சினிமாவில் ஒரே நாளில் அதிக திரைகளில் ஒரு திரைப்படம் வெளியிடும் தன்னம்பிக்கையை உருவாக்கியது.

கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை, நடிப்பு, திரைப்பட தயாரிப்புகள் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் எல்லா காலங்களிலும் உண்டு. இருப்பினும் சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த விஷயங்களில் கமலஹாசன் முன்வைக்கும் விமர்சனங்கள் தனித்துவம் மிக்கவை, உலக தமிழர்களின் கவனம் ஈர்ப்பவை.

இன்றைய தமிழகஅரசியல் பற்றி கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் வெளிப்படும் விமர்சனங்கள் உலக தமிழர்கள் மத்தியில் மட்டும் அல்ல இந்திய அரசியல் தளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்பாடுத்தியுள்ளன, சமூக வலைதளங்களில், மீடியாக்களில்.

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் தற்போது இல்லை. அதனால் கமலஹாசனும், அவரைத் தொடர்ந்து நடிகர்களும் இன்றைய அரசியலை கிண்டல் கேலி செய்து வருகின்றனர், பிற பொது பிரச்சினைகளில் இவர்கள் கருத்து சொல்வது இல்லை என்ற எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற நடிகரால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சியின் மூலம் அமைச்சர் பதவிக்கு வந்துள்ள கே.ஏ.செங்கோட்டையன் சினிமாகாரர்கள் எங்களை விமர்சிக்க தகுதியில்லை என கூறியது உச்சகட்ட காமெடி. சிங்கப்பூர் குடி உரிமை பெற்றவர் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் அதிமுக கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், கமலஹாசன் இந்திய குடிமகன் என்பதை மறந்து போனாது ஏன் என்பதை கேட்க தோன்றுகிறது.

கமல் வழியில் பல நடிகர்கள் தமிழக அரசியலை விமர்சித்தது புதுமையாகத் தெரியலாம். அரசியலை கமல் விமர்சனம் செய்வதில் எந்தப் புதுமையும் இல்லை. அது, கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியல் களத்தில் இல்லை என்கிற தைரியத்தினாலும் அல்ல.

கமல் அரசியல் பற்றி, சமூக அவலங்களை பற்றி கருத்து தெரிவிக்கத் தொடங்கியது ஜெயலலிதா தமிழக முதல்வராக அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்த 2001ல் தொடங்கியது. மறைந்த ஜெயலலிதா இரண்டாவது முறையாக 2001ல் தமிழக முதல்வராக பதவி ஏற்றவுடன் செய்த முதல் வேலை திமுக தலைவர் கருணாநிதியை மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தி நள்ளிரவில் கைது செய்ய உத்தரவிட்டார். கருணாநிதியை நள்ளிரவில் சென்னை போலீசார் அத்துமீறி வீடு புகுந்து அராஜகமாக கைது செய்த செய்தி அறிந்து இந்திய அரசியல் களம் அதிர்ந்தது. இந்த அத்துமீறல் கைது பற்றி அரசியல் கட்சிகள் கருத்து சொல்லவும், கண்டிக்கவும் தாமதமான நேரத்தில், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக மீடியாக்களுக்கு வந்தது கமலஹாசன் கண்டண அறிக்கை. அதன் பின்னரே திரையுலகில் பாரதிராஜா, வைரமுத்து போன்றவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.

இதற்கான நெருக்கடியை, சிரமத்தை விருமாண்டி படப்பிடிப்பின் போது அதிமுக அரசால் கமலஹாசன் சந்தித்தார். விஸ்வரூபம் பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி கட்டிய தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று பேச விஸ்வரூபம் பட ரீலீஸ் வில்லங்கமானது. தியேட்டர் உரிமையாளர்களுக்கும் - கமலஹாசனுக்கும் இருந்த பிரச்சினையை மதம் சார்ந்த பிரச்சினை ஆக்கினார்கள். அதையும் சட்ட ரீதியாகச் சந்தித்து வெற்றி பெற்றார் கமலஹாசன். விஸ்வரூபம் வெளியாகும் என்ற நிலை வந்தபோது படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு முடக்கியது. அசராத கமலஹாசன் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் விஸ்வரூபத்தை வெ ளியிட்டு தமிழக அரசின் நடவடிக்கையை கேலி கூத்தாக்கினார். கமலின் தொடர் கருத்து போராட்டத்தால் பத்திரிகையாளர் சந்திப்புக்களைத் தவிர்த்து வந்த முதல்வர் ஜெயலலிதா கொடா நாட்டில் ஒய்வை ரத்து செய்துவிட்டு சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டி வந்தது வரலாறு...!

- ராமானுஜம்

- அடுத்த பகுதி விரைவில்...

மூலக்கதை