பிரதமரை சந்திக்க பழனிசாமி திட்டம்

தினமலர்  தினமலர்
பிரதமரை சந்திக்க பழனிசாமி திட்டம்

சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற, முதல்வர் பழனிசாமி, தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்திக்கவும், தமிழக நீராதார பிரச்னைகள் குறித்து முறையிடவும் முடிவெடுத்து உள்ளார். அதற்கான, அறிக்கை தயாரிப்பு பணி, பொதுப்பணித் துறையில் நடந்து வருகிறது.

இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு கேட்ட வறட்சி நிவாரணத்தை, மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள், தமிழகத்திற்கான நீராதாரங்களில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இதற்காக, பிரதமரை சந்திக்க, முதல்வர் பழனிசாமி, டில்லி செல்லவுள்ளார்.

மூன்று மாநிலங்களிலும், நீர்நிலைகளில் அணைகள் கட்டினால், என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை, பிரதமருக்கு விளக்கும் வகையில், ஒரு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. பிரதமரை சந்திக்கும் போது, இந்த அறிக்கையை, முதல்வர் வழங்குவார். அதுமட்டுமின்றி, வறட்சி நிவாரணம் தொடர்பாக, வருவாய் துறையில், தனி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மூலக்கதை