பெங்களூருவில் ஐபிஎல் டி20 வீரர்கள் ஏலம்: பென் ஸ்டோக்சுக்கு ரூ.14.5 கோடி: புனே அணி வாங்கியது

தினகரன்  தினகரன்

பெங்களூரு,: இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 10வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.14.5 கோடிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடர், ஏப்ரல் 5ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம், பெங்களூருவில் நேற்று நடந்தது. மொத்தம் 8 அணிகளில் 44 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 140 பேர் ஏற்கனவே தக்கவைத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான ஏலத்தில் 357 வீரர்கள் இடம்பெற்றனர்.மிகவும் விறுவிறுப்பாக நடந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு புனே அணி வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. தற்போதுள்ள வீரர்களில் பெங்களூர் அணியின் விராத் கோஹ்லிக்கு (சீசனுக்கு ரூ.15 கோடி) அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறும் வீரர் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் தைமல் மில்ஸ் ஆர்சிபி அணியால் ரூ.12 கோடிக்கு வாங்கப்பட்டார். இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பவுலர் என்ற பெருமையை மில்ஸ் தட்டிச் சென்றுள்ளார். நேற்றைய ஏலத்தில் 27 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 66 வீரர்கள் ரூ.91.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

மூலக்கதை