இலங்கையில் எம்.பி.க்களுக்கு சிங்களம், தமிழ் கட்டாயம்: வருகிறது சட்டம்

தினகரன்  தினகரன்

கொழும்பு: இலங்கையில் எம்.பி.க்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் தெரிந்து இருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படும் என்று அந்நாட்டு மொழிகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன்  கூறியதாவது: எம்.பி.க்களுக்கு இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது சிங்களத்தை தவிர தமிழ் மொழியையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதால் அனைத்து சமுதாய மக்களின் பிரச்னைகளையும் புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சங்கடம் உள்ளது. எனவே அவர்கள் இரு மொழிகளையும் தெரிந்திருப்பது அவசியம் என்பது சட்டரீதியாக கட்டாயமக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே, மின்சாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் இந்திய-இலங்கை இடையிலான உறவை ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த சனிக்கிழமையன்று இலங்கை சென்றார். அவர் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அதன்பிறகு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழர்களுக்கு சமஉரிமை அளிப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

மூலக்கதை