ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கத்தில் நகை வாங்கினால் 1 சதவீத வரி

தினமலர்  தினமலர்
ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கத்தில் நகை வாங்கினால் 1 சதவீத வரி

புதுடில்லி: வரும் ஏப்., 1 முதல், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், ரொக்கத்தில் தங்க நகை வாங்குவோரிடம், மூல வரி வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.

அமல்:


வருமான வரிச் சட்டம், 206 சி பிரிவின் கீழ், 2012 முதல், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், தங்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக தங்க நகை வாங்குவோரிடம், 1 சதவீதம் மூல வரி வசூலிக்கப்படுகிறது. இதே சட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கத்தில் வாங்கப்படும் பொருட்கள், பெறப்படும் சேவைகள் ஆகியவற்றுக்கு, 1 சதவீத மூல வரி வசூலிக்கும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது.

குறைப்பு:


இந்நிலையில், 2017 - 18ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை, ரொக்கத்தில் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி, ரொக்கம் பெறுவோருக்கு, அத்தொகைக்கு நிகராக அபராதம் விதிக்கப்படும் எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் காரணமாக, மூல வரி செலுத்தாமல், தங்க நகைகளை ரொக்கத்தில் வாங்குவதற்கான வரம்பு, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஏப்., 1 முதல்:


அதாவது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல், ரொக்கத்தில், தங்கம் அல்லது தங்க நகை வாங்கினால், 1 சதவீதம் மூல வரி செலுத்த வேண்டும். 'இந்த நடைமுறை, ஏப்., 1 முதல் அமலுக்கு வர உள்ளது. அதற்கு முன், 2017ம் ஆண்டின் நிதி மசோதாவில், உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பார்லிமென்டில் ஒப்புதல் பெறப்படும்' என, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரொக்கப் பயன்பாட்டை குறைத்து, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மூலக்கதை