ருவாண்டா நாட்டில் நிரந்தர இந்திய தூதரகம்: துணை ஜனாதிபதி பேச்சு

தினகரன்  தினகரன்

கிகாலி: கிழக்கு ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் விரைவில் நிரந்தர இந்திய தூதரகம் அமைக்கப்படும் என அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார். இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, ருவாண்டா மற்றும்  உகாண்டா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார்.ருவாண்டாவில் இந்தியர்களிடையே உரை நிகழ்த்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கூறுகையில், “இந்தியாவும், ருவாண்டாவும் நல்ல நண்பர்கள். இங்கு அதிக அளவிலான இந்தியர்கள் உள்ளனர். இங்கு நிரந்தர இந்திய தூதரகம் இல்லை என்ற நிலை உள்ளது. வரும் வாரங்களில் அல்லது மாதங்களில் இந்திய நிரந்தர தூதரகம் அமைக்கப்படும். இரு நாட்டு உறவையும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதில் முக்கியமான ஒன்றாக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த உறவின் மூலமாக உங்களுக்கு இன்னும் சிறிது ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்றார். நிரந்தர இந்திய தூதரகம் அமைப்பதற்கான கொள்கை ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. எனவே தூதரகம் அமைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை