கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அப்ரிடி ஓய்வு!

PARIS TAMIL  PARIS TAMIL
கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அப்ரிடி ஓய்வு!

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 
கடந்த 21 வருடங்களாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த 36 வயதான அப்ரிடி தலை சிறந்த வீரர் என்பதுடன் பல்வேறு சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிவந்தார். இந்நிலையில் அவர் தனது 21 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்த அப்ரிடி, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடை கொடுத்தார்.
 
அதையடுத்து அவர் இருபதுக்கு - 20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியாடி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இருபதுக்கு-20 தொடரில் பாகிஸ்தான் இருபதுக்கு - 20 அணியின் தலைவராக செயல்பட்ட அப்ரிடி தொடர் நிறைவடைந்ததும் தனது அணித் தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். 
 
இந்நிலையில் தொடர்ந்து இருபதுக்கு - 20 போட்டித் தொடர்களில் விளையாடி வந்த சாஹித் அப்ரிடி இன்று அதிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவி்த்தநிலையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
கடந்த 1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கிய அப்ரிடி, இலங்கை அணிக்கெதிரான தனது 2 ஆவது போட்டியில், 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்தார். இச் சாதனை 19 ஆண்டுகளின் பின்னர் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹித் அப்ரிடி 1176 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதிகபட்சமாக 156 ஓட்டங்களையும் 48 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064ஓட்டங்களை குவித்துள்ள சாஹித் அப்ரிடி அதிகபட்சமாக 124 ஓட்டங்களையும் 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 
 
இதேவேளை, சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளில் 98 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹித் அப்ரிடி 1405 ஓட்டங்களையும் 97 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை