அபாயத்தை உணர்ந்தது ஆஸ்திரேலியா கோஹ்லியுடன் வார்த்தை போர் கிடையாது : வார்னர் சூசகம்

தினகரன்  தினகரன்

மும்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டி புனேவில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக இந்திய ஏ அணியுடன் ஆஸ்திரேலியா விளையாடிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 7 விக்ெகட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய ஏ அணியும் பதிலுக்கு 403 ரன் குவித்தது. ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 202 ரன் எடுத்தார். இதன்பின் கடைசி நாளான நேற்று 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது. வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்கள் எதிரணி வீரர்களின் கவனத்தை திசை திருப்ப வார்த்தை போரில் ஈடுபடுவதும், கிண்டல் செய்வதும் வழக்கம். பயிற்சி போட்டியின்போது டேவிட் வார்னர், மேத்யூ வேட் ஆகியோர் கிண்டல் செய்ததாக ஷ்ரேயாஸ் கூட தெரிவித்திருந்தார். இதனிடையே எதிர்வரவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் விராட் கோஹ்லி கேப்டனாக இருக்கும்போது இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலரும் ஸ்டீவன் ஸ்மித்துக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதன் அபாயத்தை முழுமையாக உணர்ந்து கொண்டுள்ள ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், நல்ல பார்மில் உள்ள விராட் கோஹ்லியுடன் வார்த்தை போரில் ஈடுபட போவது இல்லை என சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் விராட் கோஹ்லி உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களால் முடிந்த வரை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். முக்கியத்துவம் அற்ற விவகாரங்களில் விராட் கோஹ்லியிடம் காலத்தை வீணாக்கினால், அது அவரை இன்னும் வலுவானவராக மாற்றி விடும். வார்த்தை போருக்கும், வேடிக்கையான விஷயங்களுக்கும் இடமில்ைல’ என்றார். கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது கடுமையான வார்த்தைகளால் விராட் கோஹ்லியை ஆஸ்திரேலிய வீரர்கள் கிண்டல் செய்தனர். இதற்கு பதிலடியாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் விராட் கோஹ்லி 692 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக 2013ம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த ஆஸ்திரேலிய அணி 4-0 என ஒயிட்வாஷ் ஆனது. அந்த தொடரில் டேவிட் வார்னர் 195 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த முறை இங்கு விளையாடியபோது, இந்தியாவில் விளையாடுவது அதுதான் எனக்கு முதல் முறையாக இருந்தது. இதனால் மிகவும் கடினமாகவும், சவாலாகவும் இருந்தது. ஆனால் கடந்த முறையை விட தற்போது நன்றாக தயாராகியுள்ளேன். ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் சிறந்த பந்து வீச்சாளர். அதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒவ்வொரு அணியினரும் அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான திட்டங்களுடன் களமிறங்குகின்றனர். அந்த வகையில் எங்களுக்கான திட்டமும் கிடைத்துள்ளது’ என்றார்.

மூலக்கதை