208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

 ஐதராபாத்தில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 
இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 388 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ‘பாலோ ஆன்’ கொடுக்காமல் 299 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா விளையாடியது. 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்த நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வங்காள தேசத்துக்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
 
2-வது இன்னிங்சை விளையாடிய வங்காள தேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து இருந்தது. சவுமியா சர்கார் 42 ரன் எடுத்தார். மகமதுல்லா 9 ரன்னுடனும், சாஹிப் அல் ஹசன் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 356 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பேட்டிங் செய்தது. எஞ்சிய 7 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி பந்து வீச்சை தொடர்ந்தது.
 
ஆட்டம் தொடங்கிய 4-வது ஓவரிலேயே வங்காள தேச அணியின் 4-வது விக்கெட் சரிந்தது. முன்னாள் கேப்டன் சாஹிப் அல் ஹசன் 22 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். அப்போது அந்த அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தது.
 
அரைசதம் அடித்த மெஹ்முதுல்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி
 
5-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லாவுடன் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சால் எளிதில் அவுட் செய்தார். அவர் 23 ரன்களே எடுத்தார். அப்போது வங்காள தேச அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 162 ஆக இருந்தது. அடுத்து சபீர் ரஹ்மான் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மெஹ்முதுல்லா பொறுப்புடன் விளையாடி 115 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
 
மதிய உணவு இடைவேளையின் போது வங்காள தேசம் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து இருந்தது. மெஹ்முதுல்லா 58 ரன்னுடனும், சபீர் ரஹ்மான் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
முஷ்பிகுர் ரஹிமை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் அஸ்வின்
 
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இசாந்த் சர்மா பந்தில் அனல் பறந்தது. சபீர் ரஹ்மான் மேலும் நான்கு ரன்கள் எடுத்து 22 ரன்னில் இசாந்த் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். மெஹ்முதுல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
சாஹிப் அல் ஹசன் அடித்த பந்தை பிடிக்கும் புஜாரா
 
அதன்பின் உள்ள விக்கெட்டுக்களை ஜடேஜாவும், அஸ்வினும் பார்த்துக் கொண்டனர். 23 ரன்கள் எடுத்து மெஹேதி ஹசன் மிராஸ் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். தைஜூல் 6 ரன்னில் ஜடேஜா பந்திலும், தஸ்கின் அகமது 1 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்திலும் ஆட்டம் இழந்தனர். இதனால் வங்காள தேசம் 100.3 ஓவரில் 250 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கம்ருல் இஸ்லாம் ரஃபி 3 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.
 
இதனால் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின், ஜடேஜா தலா நான்கு விக்கெட்டுக்களும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை