தடை நீக்க கோர்ட் மறுப்பு டிரம்புக்கு பின்னடைவு

தினமலர்  தினமலர்


வாஷிங்டன் சிரியா உள்ளிட்ட, ஏழு முஸ்லிம் நாடுகளின் பயணிகள், அமெரிக்காவில் நுழைய, அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடைக்கு, விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய, கோர்ட் மறுத்து விட்டது.
சிரியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய, அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்தார். இந்த தடையை எதிர்த்து, சியாட்டிலில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், டிரம்ப் விதித்த தடைக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து, அமெரிக்க அரசு, மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதை, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்தது.
'ஏழு நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்கான ஆதாரங்களை, அரசு தாக்கல் செய்யவில்லை' என, நீதிபதிகள் கூறினர். இதுபற்றி அதிபர் டிரம்ப் கூறுகையில், ''நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது,'' என்றார். இதனிடையே அதிபர் டிரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக,
கலிபோர்னியா உட்பட, 16 மாகாணங்களின் தலைமை வக்கீல்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
தடை உத்தரவுக்கு எதிராக, அந்தந்த மாகாணங்களில் நடைபெறும் வழக்குகளில் அவர்கள் ஆஜராகி, தங்கள் கருத்தை வலியுறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
100 நிறுவனங்கள் வழக்கு
அதிபர் டிரம்பின் தடை உத்தரவை எதிர்த்து, கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட, 100 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து, சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
'தடை ஆணையால், வெளிநாடுகளில் சேவையை விரிவுபடுத்த முடியவில்லை; திறமையான ஊழியர்களை ஈர்க்க முடியவில்லை. நாட்டின் நலன் கருதி தடையை நீக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.---------------

மூலக்கதை