வீரம் செறிந்த ஈழ மண்! தமிழை பரப்பும் புலம்யெர் தமிழர்கள்! யாழில் விஜய் பெருமிதம்

PARIS TAMIL  PARIS TAMIL
வீரம் செறிந்த ஈழ மண்! தமிழை பரப்பும் புலம்யெர் தமிழர்கள்! யாழில் விஜய் பெருமிதம்

 உலகப் புகழ்பெற்ற உலகின் சரித்திரங்களே மிரண்டுபோகும் உலகின் வீரவரலாறு எழுதிய இந்த யாழ். மண்ணை எனது பூசை அறையில் வைத்து வணங்க விரும்புகின்றேன் என தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்  பா.விஜய் தெரிவித்துள்ளார். 

 
யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விஜய் உரையாற்றினார்.
 
உலகப் புகழ் பெற்ற, உலகின் சரித்திரங்களே மிரண்டு போகும் வீர வரலாறு எழுதிய யாழ் மண்ணில் முதன் முதலாக வந்துள்ளேன். இந்த மண்ணை வணங்குகின்றேன். இந்த மண்ணை எடுத்துச் சென்று எனது பூசை அறையில் வைத்து வணங்கவே விரும்புகின்றேன். ஏனெனில் மாபெரும் வீர வரலாறு இடம்பெற்ற இந்தமண் மறக்க முடியாத மாபெரும் சரித்திரம் குடிகொண்டுள்ள மண்தான் இது.
 
அண்மையில். இந்தியாவில் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு நடந்த நிகழ்வு மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராட்டம். அப் போராட்டத்தில் இந்த இனத்தின் கலாசாரத்தை மீட்க இடம்பெற்றது.
 
அந்த போராட்டத்தின் மூன்றாம் நாள் பங்கு கொண்டேன். அதே உணர்வோடு இன்று இந்த மண்ணில் கால் பதிக்கின்றேன். நான் தமிழகத்தில் வருடத்திற்கு 40 கல்லூருகளிற்காவது செல்வேன் ஆனால் அந்த மாணவர்களைச் சந்திக்கும் மன நிலைவேறு உங்களைச் சந்திக்கும் மன நிலைவேறு.
 
தமிழக மாணவர்களையும் இங்குள்ள மாணவர்களையும் ஒரேமாதிரியாக எண்ணிப்பார்க்க என்னால் முடியவில்லை. எமது நாட்டில் உள்ள பாதுகாப்பு, கை கொடுத்து உதவுவதற்குரிய ஆள், கேட்டது கிடைக்கும் நிலமை.
 
ஆனால் இங்கு வேறு சூழல். உங்களைப் போன்ற மாணவர்களே நாளைய எடுத்துக்காட்டான தலைவர்கள். உலகில் அழித்து ஒடுக்கப்படும் இணத்தில் இருந்துதான் தலைவன் பிறப்பான் அப்பணியான ஓர் இனமே நீங்கள்.
 
இங்குள்ள இளைஞர்கள் திரையுலகம், முகப்புத்தகம், ருவிற்றரில் உலாவ வேண்டியவர்கள் அல்ல. உங்களுக்குள் மிகப்பெரிய போராட்டம் உள்ளது. நீங்கள் விழித்து வெளிவந்து உங்களுக்குள் உள்ள ஆற்றலை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்தி அதன் மூலம் ஓர் அங்கீகாரத்தைப் பெற்று அடுத்த தலைமுறைக்கு விளக்கேற்ற வேண்டிய சூழலில் உள்ளவர்கள். இதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் உண்டு. எனது திரையுலக விம்பத்தினை உங்கள் மீது திணிக்க நான் விரும்பவில்லை.
 
இந்த இனத்திற்கு நிறையப் பேசுபவர்கள் அன்றி நிறைய சாதிக்கின்றவர்களே இன்று வேண்டும். எவன் ஒருவன் தான் பட்ட அவமானத்தினை சேமித்து வைத்திருக்கின்றானோ அவன் நிச்சயமாக அரியாசணம் ஏறுவான்.
 
வாழ்வில் நடந்த அவமானம் அத்தனைக்கும் உலகம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற ஒற்றைக் கனவோடும் முயற்சியோடும் உங்கள் பயங்களை தொடங்குங்கள் உறுதியாக இந்த உலகம் ஒரு நாள் தனது கரத்தை உயர்த்தும். அப்போது உங்களிற்கான சிம்மாசனத்தை வழங்கும். அதில் மாற்றம் இல்லை.
 
யாழிற்கு கொழும்பின் ஊடாகப் பயணித்த வெறும் 8 மணிநேர பயண வலியையே என்னால் தாங்க முடியவில்லை. மிகப்பெரிய இதய வலியை சுமந்துகொண்டு எவ்வளவு உற்சாகமாக இங்கு ஓர் இனம் உள்ளதே அதற்கு எவ்வளவு உற்சாகம் வேண்டும்.என எண்ணுகின்றேன்.
 
என் உள்ளத்தில் ஊரும் உணர்ச்சிகளை முழுமையாக சொல்ல முடியாத தருணத்தில் இருக்கின்றேன்.அதனை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.
 
நாம் தமிழால் வளர்ந்திருக்கின்றோம். ஆனால் தமிழை ஈழத்தவர்களே வாழச் செய்கின்றனர். இதற்கு உலகம் முழுதும் பரவியுள்ள ஈழத் தமிழர்கள் இப்படியை ஆற்றுகின்றனர். இன்றும் உலகிலர தமிழர்களிற்கு என்று அடையாளம் இருக்குமானால் அது நிச்சயமாக ஈழத்தமிழர்களினால்தான் அந்த இடம். ஈழத் தமிழன் எவனையும் வஞ்சிக்க மாட்டான்.
 
இவ்வாறான இந்த இனம் விடியவேண்டுமானால் அது மாணவர்களின் கையிலேயே உள்ளது. அதாவது கையில் ஆயுதம் இருந்தால் பறிக்கப்படலாம் தோற்றுவிடும், கையில் பணம் இருந்தால் பறிக்கப்படலாம் தோற்றுவிடும், ஆனால் உங்கள் கைகளில் அறிவை வைத்திருந்தால் அது ஜெயித்து விடும்.
 
எனவே அறிவால் உலகையே மிரட்டுங்கள். அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் தேவையில்லாத விடயத்தில் கவணம் செலுத்தாது இலக்கை நோக்கி நகருங்கள். இன்றைய இளம் சமூகம் மூழ்கும் சினிமா, பேஸ் புக், துடுப்பாட்டத்தில் நீங்களும் மூழ்காதீர்கள். நீங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகமானது.
 
இன்று உலகம் முழுக்கவுள்ள தமிழர்கள் உங்களிற்காக காத்திழுக்கின்றனர். தயக்கத்தை தூக்கி எறியுங்கள் தயங்கினால் சாதிக்க முடியாது .தயக்கத்தை உடைத்த மாவீரன் நெப்போலியன். மாவீரனைப்பற்றி இந்த மண்ணில் பேசவேண்டிய தேவையில்லை. இருப்பினும் உதாரணத்திற்காக கூறினேன்.
 
இதேநேரம் இந்தப் பகுதி மக்களை எண்ணியே நான் எழுதிய பாடல் ஒன்று இன்னும் இன்னும் என்ன தோழா…. மற்றும் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் …..போன்ற பாடல் உட்பட இன்றுவரை 3 ஆயிரம் பாடல்களிற்கும் மேல் எழுதியுள்ளேன்.
 
எனவே தமிழ் அழியாது . தமிழ் வரலாறு நீண்டது தமிழை அன்று வளர்த்த இராஜராஜ சோழனின் படைப்பே தஞ்சைப் பெரிய கோயில் . இக் கோயிலின் படைப்பிலேயே தமிழ் உள்ளது. அதாவது தமிழின் உயிர் எழுத்து 12 அதனாலேயே இங்குள்ள லிங்கம் 12 அடி.
 
தமிழின் மெய் எழுத்து 18 அதனால் லிங்கத்தின் சுற்றளவு 18 அடி , தமிழின் உயிர் மெய் எழுத்து 216 என்பதனால் இக் கோயிலின் கோபுரம் 216 அடி உயரம் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களே 247 என்பதனால் இங்குள்ள நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 247 அடிகளாகும். இவைகளும் தமிழின் சிறப்பு ஆகும். என்றார்.

மூலக்கதை