ஷ்ரேயாஸ் இரட்டை சதம் பயிற்சி ஆட்டம் டிரா

தினகரன்  தினகரன்

மும்பை: ஆஸ்திரேலியா - இந்தியா ஏ அணிகளிடையே நடந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.மும்பை, பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் (பிப். 17-19), டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 107 ரன், ஷான் மார்ஷ் 104 ரன் ஹேண்ட்ஸ்கோம்ப் 45, வேட் 64, எம்.மார்ஷ் 75 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 85 ரன், ரிஷப் பன்ட் 3 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பன்ட் 21, இஷான் கிஷண் 4 ரன்னில் வெளியேறினர். ஷ்ரேயாஸ் - கவுதம் ஜோடி 7வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 138 ரன் சேர்த்தது. கவுதம் 74 ரன் (68 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), நதீம் 0, டிண்டா 2, சாய்னி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்தியா ஏ அணி 403 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த ஷ்ரேயாஸ் 202 ரன்னுடன் (210 பந்து, 27 பவுண்டரி, 7 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 66 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. வார்னர் 35, ரென்ஷா 10, மேக்ஸ்வெல் 1, ஹேண்ட்ஸ்கோம்ப் 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஓ கீப் 19, மேத்யூ வேட் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனே எம்சிஏ மைதானத்தில் 23ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை