தனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில் ஆர்வமில்லை:மத்திய சுகாதார திட்டங்களில் சுணக்கம்

தினமலர்  தினமலர்

கம்பம்;தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார் பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படும். மாத்திரைகளை பள்ளிகளுக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் வழங்குவார்கள். அதேபோன்று தட்டம்மை நோய்த் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இதற்கான தடுப்பூசிகளை பள்ளிகளுக்கு சென்று சுகாதாரத்துறையினர் போட்டனர்.
ஆனால் இந்த இரு திட்டங்களிலும் தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளிகள் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. சில பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால், அவர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி, மாத்திரைகளையோ தர அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்துவதில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் காட்டும் ஆர்வம்:சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ' மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில பள்ளிகளில் உள்ளேயே அனுமதிக்க வில்லை. மாறாக அரசு பள்ளிகளில் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டது. குடற்புழு மாத்திரைகள் தரப்பட்டது.
தேசிய சுகாதார திட்டம் அரசு பள்ளிகளில் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்படவில்லை. இதனால் அரசின் இலக்கு எட்டப்படவில்லை' என்றனர். தேசிய சுகாதார திட்டத்தின் சார்பில் போடப்படும் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை