அகற்ற வழி காணுங்க:ஆக்கிரமிப்பால் குறுகிவரும் ரோடுகள்:போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு

தினமலர்  தினமலர்

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டத்தில் மெயின் ரோட்டில் துவங்கி பொதுமக்கள் வசிக்கும் தெருக்கள், சந்து பொந்துகள் வரை ஆக்கிரமிப்புகள் முடிவில்லாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து ரோடுகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. மாவட்டத்தில் ரோடுகள், தெருக்கள், சந்துகள் உட்பட அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் நீண்ட ஆண்டுகளாக அகற்றப்படாததால், அவை நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர மேலும் புதிதாக ஆக்கிரமிப்புகள் உருவாகி மக்கள் நடமாடுவதற்கு கூட இடமின்றி அதிகரித்தபடி உள்ளது. இவற்றை அகற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முட்டுக்கட்டை
அதன்படி மதுரை, சென்னை உட்பட பெருநகரங்களில் அகற்றப்பட்டது. பல கட்டடங்கள் சீல்வைக்கப்பட்டது. ரோடுகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் தவிர அனுமதியின்றி கட்டப்பட்ட பலமாடி கட்டடங்களும் இடிக்கப்பட்டன. சில நகரங்களில் அவை வரைமுறைபடுத்தப்பட்டன. ஆனால் விருதுநகர் போன்ற இரண்டாம் நிலை நகரப்பகுதிகளிலும், மாவட்டத்தில் உள்ள மற்ற நகராட்சிகளிலும் அந்த உத்தரவை பின்பற்றவில்லை. அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டதால் உயர்நீதிமன்ற உத்தரவு வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டது. சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு குறியிடப்பட்டன. ஆனால் அகற்றப்படவில்லை. கான்கிரீட் கட்டடம்இப்படிப்பட்ட அவசரசூழ்நிலையிலும் கூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் இனி எந்தக்காலத்திலும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாது என ஆக்கிரமிப்பாளர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அவற்றை பெரும்பாலானோர் நிரந்தரப்படுத்தினர். கூரை ஆக்கிரமிப்புகள் கான்கிரீட் ஆக்கிரமிப்புகளாயின. அவற்றிற்கு அரசியல்வாதிகள் துணையோடு பட்டாக்களும் பெறப்படுகின்றன. அதோடு முடிந்துவிடவில்லை. கான்கிரீட் கட்டடங்களுக்கு முன் மீண்டும் கூரை, தகரம் வேய்ந்து மேலும் ஆக்கிரமிக்க துவங்கினர். புற்றீசலாய்இவர்கள் மட்டுமின்றி புதிதாக பலரும் ஆக்கிரமிப்புகளில் இறங்கினர். மெயின் பஜார்களில் தொடங்கி ஒதுக்குப்புறமான இடங்கள் வரை ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தடுக்க வேண்டிய அதிகாரிகளோ, அரசு நிர்வாகமோ இதை கண்டுகொள்வதே இல்லை. இப்படி ஆக்கிரமிப்புகள் புற்றீசலாய் பெருகி வருவதால் ரோடுகளும் தெருக்களும் குறுகிக்கொண்டே வருகிறது. வாகனங்கள் செல்வதற்கு கூட வழியின்றி எல்லா ஊர்களிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. வத்திராயிருப்பு போன்ற 3ம் நிலை நகரங்களில்கூட இம்மியளவு இடத்தைகூட விட்டுவைக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் போட்டி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இரண்டு வாகனங்கள் சென்றுவந்த அகலமான மெயின் ரோடு இன்று ஒரு வாகனம் செல்வதற்கே திணறும் நிலை உள்ளது. பாதை கூட இருக்காதுவத்திராயிருப்பு ராமச்சந்திரன் கூறுகையில், “ஒருபக்கம் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மறுபுறம் ரோடுகளின் அகலம் குறுகிக்கொண்டே செல்கிறது. முன்பு ஒன்றிரண்டு வாகனங்கள் சென்ற ரோட்டில் இன்று நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் செல்கிறது. இவற்றின் எண்ணிக்கை ஏற்ப ரோடுகளின் அகலத்தை அதிகரிக்க வேண்டாமா. அதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இருக்கும் ரோடுகளின் அகலத்தையும் ஆக்கிரமிக்கிறார்கள் அதையும் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். நிலைமை இப்படியே போனால் நடந்து செல்வதற்கு ஒற்றையடி பாதைகூட இருக்காது,' என்றார்.

மூலக்கதை