சிவகங்கையில் நாய் தொல்லை...அதிகரிப்பு: தினமும் 10 பேருக்கு கடி

தினமலர்  தினமலர்

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தினமும் நாய் கடியால் 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை நகர், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரில் தெருவிற்கு 10 நாய்கள் திரிகின்றன. அவை அவ்வழியாக செல்வோரை விரட்டி கடிக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியவில்லை. பெண்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. ரோட்டில் நாய்கள் குறுக்கே செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்து குள்ளாகின்றனர்.
நாய்க்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஏராளமான நிதி ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் சிவகங்கை நகராட்சியில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சிவகங்கை பகுதியில் தினமும் நாய் கடியால் 8 முதல் 10 பேர் வரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பிப்., 15 முதல் இதுவரை 56 பேர் 'ரேபிஸ்' தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று காளையார்கோவில் பனங்காடி அருகே ராணியூரை சேர்ந்த உக்கிர வீர பாண்டியனின் மகள் அட்சயா,5, மற்றும் 6 பேரை நாய் கடித்தது. அதேபோல் சிவகங்கை ஆசிரியர் அய்யப்பனுக்கும் நாய் கடித்தது.
அய்யப்பன் கூறுகையில், “நாய்கடியால் ஏற்படும் வேதனையை விட அதன் பாதிப்பு என்ன செய்யுமோ என்ற அச்சமே மனவேதனையை தருகிறது. சிவகங்கை நகரில் பெருகிவிட்ட தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்,” என்றார். நகராட்சி ஆணையர் சங்கரன் கூறுகையில், “ நகராட்சிக்குள் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு நாய்களுக்கு நோய் தடுப்பூசி போட வேண்டும். அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். வீட்டு நாய்களை தெருவில் அவிழ்த்து விட்டால் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு தடுப்பூசி
சிவகங்கை அருகே முத்துார் வாணியங்குடியை சேர்ந்த உடையம்மை,65, பசு மாடு வளர்க்கிறார். இரண்டு தினங்களுக்கு முன் வெறிநாய் பசு மாட்டை கடித்தது. அந்த மாட்டின் பாலை குடித்த கன்றுக்குட்டி இறந்து விட்டது. இதனால் அச்சமடைந்த உடையம்மை, அவரது குடும்பத்தை சேர்ந்த பூர்ணிமா,31, உதயா,4, சத்யா,10, போதும் பொண்ணு,36, பவுலேஸ்வரன், 10, கீர்த்திகா,5, ராகவன்,3, ஆகிய 8 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'ரேபிஸ்' தடுப்பூசி போட்டு சென்றனர்.

மூலக்கதை