ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் மெத்தனம்: விவசாயிகளுக்கு தொடரும் சிக்கல்

தினமலர்  தினமலர்
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் மெத்தனம்: விவசாயிகளுக்கு தொடரும் சிக்கல்

திண்டுக்கல்:குளங்கள், கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். சீமைகருவேல முற்கள் அகற்றுவது போல, இதை அகற்ற முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 800க்கும் அதிகமான குளங்கள், கண்மாய்கள் உள்ளன. இவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற, அப்போதைய கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அனைத்து குளங்களின் ஆக்கிரமிப்புகளையும் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டினர். குளங்களுக்குள் குடிசை போட்டு வசித்தவர்கள், ஆக்கிரமித்து விவசாயம் செய்த இடங்கள் கணக்கிடப்பட்டன. மேலும் குளங்கள், கண்மாய்களுக்குள் எல்லை கல் ஊன்றப்பட்டது. பழநி வையாபுரி குளத்தை சுற்றி நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.
அரசியல் தலையீடு: மாவட்டத்தில் குளங்கள், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர்கள் முற்பட்ட போது, அப்போதைய ஆளும் கட்சி தலையீட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு பின்பு வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளவில்லை.
இது தருணம்: திண்டுக்கல் மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் வறண்டு கிடக்கிறது. இதை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் மழை பெய்தால் குறிப்பிட்ட அளவு நீரை சேமிக்க முடியாத நிலையும் ஏற்படும். இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை எந்தவித பாரபட்சமும் காட்டாமல் அகற்றி, குளங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். மேலும் சீமை கருவேல முற்களை வேரூடன் பறிக்கின்றனர். இந்நேரத்தில் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை