சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் திமுக உண்ணாவிரதம்:திருச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக வரும் 22-ந் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார். பின்னர் மெரினா கடற்கரையில் அமர்ந்து அரை மணிநேரம் போராட்டம் நடத்தி கைதானார்.

இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் சட்டசபை சம்பவம் தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து புகார் கொடுப்பது தொடர்பாகவும் எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபையில் திமுகவினர் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 22-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை