நம்பிக்கை தீர்மானத்தை 2 முறை முதல்வர் முன் மொழிந்தது சட்ட மீறல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நம்பிக்கை தீர்மானத்தை 2 முறை முதல்வர் முன் மொழிந்தது சட்ட மீறல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை முன்மொழிந்துள்ளார். இது சட்ட மீறலாகும் என்று எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பேரவை விதிகளின்படி, இந்தத் தீர்மானம் செல்லாது. செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கத்தல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஒரே நாளில் 2 முறை தீர்மானம் முன்மொழிந்ததால் நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சட்டப் பேரவையில் வாக்கெடுப்பை எப்படி நடத்துவது என்பது சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம். அவரை விடவும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள். அவர்களின் மனதை பிரதிபலிக்க வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகள். அதற்கான சுதந்திரத்தை வழங்கும் வகையில் ரகசிய வாக்கெடுப்போ, மக்களின் மன உணர்வை அறிந்து வரும் வகையில் கால அவகாசமோ வேண்டும் என்பதை தி.மு.க மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தின.

அதனை சபாநாயகர் முற்றிலுமாகப் புறக்கணித்த நிலையில் தான், அவரது இருக்கையை சுற்றி நின்று தி.மு.கழக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். ஆனால், சபாநாயகர் எழுந்து செல்வதிலேயே கவனமாக இருந்தார். உள்ளே உள்ள தனது அறைக்குச் சென்றால், தனக்கு செல்போனில் வரும் தொலைதூரக் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்பட்டு, பினாமி ஆட்சியைக் காப்பாற்றி விடலாம் என்பது தான் அவரது திட்டம்.

சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு முறை நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் அதனை முன்மொழிய 6 மாதகால அவகாசம் வேண்டும். ஆனால், பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டபோது, இரண்டு முறை அந்தத் தீர்மானத்தை பினாமி முதல்வர் முன்மொழிந்தார். இதுவே சட்டமீறலாகும். பேரவை விதிகளின்படி, இந்தத் தீர்மானம் செல்லாது. செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கத்தல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை