பயிர்கள் கருகியதால் பரிதாபம்... தாராசுரத்தில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பயிர்கள் கருகியதால் பரிதாபம்... தாராசுரத்தில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

கும்பகோணம்: விவசாயத்திற்கு தேவையான தண்ணரீன்றி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி கும்பகோணம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம், ஆலங்குடி பிரதான சாலையைச் சோந்த கலியபெருமாள் என்பவரது மகன் கண்ணதாசன். 42 வயதான இவருக்கு லோகநாயகி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா்.

விவசாயியான கண்ணதாசனுக்கு சொந்தமாக சுமார் 3 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் சம்பா நடவு செய்திருந்தார். இதற்காக அவர் சுமார் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று செலவு செய்துள்ளார். ஆனால், போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியது. இதனால் தான் வாங்கிய கடன் தொகையைக் கூட அடைக்க முடியாமல் போய்விட்டதே என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கண்ணதாசன் அவரது மனைவியிடம் வயலுக்கு சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர்கள் பல இடங்களுக்கு சென்று தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதனிடையே கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை போலீஸாருக்கு, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதி ரயில் தண்டவாளம் அருகில் ஒருவர் ரயில் அடிபட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீஸார் அங்கு சென்று விசாரித்த போது, இறந்து கிடப்பது கண்ணதாசன் என்பது தெரிய வந்தது.

பின்னா், இதுகுறித்த தகவலை அவரது உறவினா்களுக்கு போலீசார் தெரிவித்தனர். கண்ணதாசனின் மனைவி லோகநாயகி கணவர் உடலைப் பார்த்து உறுதி செய்த பின்னர், சடலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை