"பினாமி அரசுகள்".... தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பினாமி அரசுகள்.... தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது!

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். அவருக்கு மத்திய அரசு முழுமையாக ஆதரவு தந்தது. ஆகையால் பாஜகவின் பினாமி அரசாக ஓபிஎஸ் அரசு விமர்சிக்கப்பட்டது.

இதன்பின்னர் சசிகலா முதல்வராக விரும்பினார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அவர் சிறைக்குப் போய்விட்டார். இப்போது சசிகலாவின் சாய்ஸாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இருக்கிறார்.

சசிகலா சிறைக்குச் செல்லும்போதே அதிமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் தமது சகோதரி வனிதாமணியின் மகன் டி.டி.வி. தினகரனை அமர்த்திவிட்டார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் டிடிவி தினகரன் எங்கு போனாலும் நிழல்போல் தொடர்வது அதிமுக கட்சியையும் ஆட்சியையும் சசி குடும்பத்தினர் முழுமையாக தங்களது கஸ்டடியில் எடுத்துக் கொள்கிறது... எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சசிகலா தரப்பின் பினாமி ஆட்சி என்பதையே காட்டுகிறது.

அதே நேரத்தில் எப்படி ஓ. பன்னீர்செல்வத்தை சசிகலா நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாரோ அதே போல எடப்பாடியையும் ராஜினமா செய்ய வைத்து விட்டு தினகரனை முதல்வராக்கியே தீருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தபோதே இந்த நிபந்தனை அதிமுக எம்எல்ஏ-க்களிடமும் தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.

ஒருவேளை தினகரன் முதல்வராக முடியவில்லையென்றாலும் சசிகலா உள்பட அவரது குடும்பத்தாரின் சொல்படி தமிழகத்தில் மற்றொரு நபர் தலைமையில் இன்னொரு பினாமி ஆட்சி நடக்கும் என்பதில் எள்முனை அளவும் சந்தேகமும் தேவை இல்லை. இதனால்தான் ஓபிஸ் மற்றும் ஸ்டாலின் தரப்பு ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டசபை சபாநாயகர் தனபாலுடன் மல்லுக்கட்டிப் பார்த்தன. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

கடும் களேபரத்துக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 122 எம்எல்ஏ-க்களுடன் எடப்பாடி வெற்றி பெற்றதாத தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

எது எப்படியாயினும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பும், ஸ்டாலின் தரப்பும் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளதால் இறுதி முடிவு ஆளுநரின் கையில் உள்ளது. தற்போது, சட்டசபை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவித்து, இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 356-ன்கீழ் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

 

 

122 எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி வாக்காளர்களிடம் கருத்து கேட்டு பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்ய வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தலாம் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஏதாவது ஒரு சூழலில் ஆட்சி கவிழுமா?, அதில் நமக்கு ஆதாயம் கிடைக்குமா? என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் பல்வேறு வியூகங்கள் வகுத்து காத்து கிடப்பது வழக்கம்தான்.

அதே நேரத்தில் இப்படியான பினாமி ஆட்சிகளுக்காகவா? வாக்களித்தோம் என நொந்து வெந்து போய் கிடக்கும் வாக்காளர்கள் நிலைதான் பரிதாபகரமானது. இந்த நிலையில் மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் ஆட்சி நடத்திய கர்மவீரர் காமராஜர் போன்றோரை அழைத்துக் கொண்ட காலன் மீது வாக்காளர்களாகிய நாம் கோபப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது?

மூலக்கதை