உரிய நீதியை வழங்க வேண்டும்.. சட்டசபை அமளியை குறிப்பிட்டு ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உரிய நீதியை வழங்க வேண்டும்.. சட்டசபை அமளியை குறிப்பிட்டு ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 18-02-2017 அன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது சபாநாயகர் அவர்கள் கையாண்ட சில வழிமுறைகளை அறிந்திருப்பீர்கள். ஒரு போர் நடக்கும் சூழலை ஏற்படுத்துவது போல, சட்டமன்ற வளாகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, ஒரு பயங்கரவாத சம்பவம் அரங்கேறும் தோற்றம் உருவாக்கப்பட்டு இருந்தது.

சட்டமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நான் சென்றபோது, என் வாகனத்தை மறித்த காவல்துறையினர், என் எதிர்ப்பையும் மீறி, சட்டத்திற்கு புறம்பாக எதையோ மறைத்து எடுத்துக் கொண்டு செல்வது போல வாகனம் முழுவதையும் சோதனையிட்டனர். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதை சற்றும் கருத்தில் கொள்ளாமல், வேண்டுமென்றே அப்படி செயல்பட்டனர்.

கடந்த சில நாட்களாக சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள கடற்கரை விடுதியில், பிணைக்கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கடுமையான பாதுகாப்புடன் சென்னை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து வரப்பட்டது, அவர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது.

 

 

அவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, நான் எழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகவும், தங்கள் மனசாட்சிப்படியும் நியாமாக வாக்களிக்கும் வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் சபாநாயகர் எனது வேண்டுகோளுக்கு பதில் அளிக்காமல், வெளிப்படையான வாக்கெடுப்பை விரைந்து நடத்துவதில் ஆர்வமாக இருந்ததால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து போராடியதால் சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். பிற எதிர் கட்சிகளும் மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மீண்டும் அவை கூடியபோது, வெளிப்படையான வாக்கெடுப்பையே சபாநாயகர் நடத்த முயன்றதால், போராட்டம் நீடித்தது.

 

 

எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேறு வழியின்றி, சட்டசபைக்குள் அமைதிமுறையிலான தர்ணா போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். உடனே சபாநாயகர் உரிய நடைமுறைகள், வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல், திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். முன்கூட்டியே சபாநாயகர் அளித்திருந்த வழிகாட்டுதல்படி காவல்துறையினர் அவைக்குள் நுழைந்தனர். அவைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து வலுக்கட்டாயமாக எங்களை அவைக்குள் இருந்து வெளியேற்றியதில், எங்களில் பலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

சபாநாயகரின் நடவடிக்கைகள் அனைத்துமே முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு, பிறகு அவையில் நிறைவேற்றப்பட்டது போல இருந்தது. சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும்போது, அவை ஒத்தி வைக்கப்பட்டால், அந்த தீர்மானம் கைவிடப்பட வேண்டும் என்ற விதியை கூட சபாநாயகர் புறக்கணித்தார்.

 

 

சபாநாயகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததுபோல, வலுக்கட்டயாமாக வெளியேற்றப்பட்டும், வெளிநடப்பு செய்தும் ஒட்டுமொத்த எதிர் கட்சி உறுப்பினர்களும் அவைக்கு வெளியில் இருந்த நிலையில், அவசர கோலத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வெளிப்படையான வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானதாகவும், முழுவதும் ஜனநாயகமற்ற செயல்பாடாகவும் அமைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலான மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும், முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவைக்குள் இல்லாமலேயே, சபாநாயகர் வாக்கெடுப்பினை நடத்தியிருக்கிறார்.

ஒரே ஒரு கட்சியை சேர்ந்த இரு பிரிவுகளுக்குள் பொது தேர்தல் நடத்துவது போல, அதிமுக என்ற ஒரே ஒரு கட்சியின் இரு பிரிவுகள் மட்டும் அவைக்குள் இருந்தபோது இந்த வாக்கெடுப்பு நடந்தேறியிருக்கிறது. இது நியாயமற்றது என்பதோடு சட்டவிரோதமும் கூட. மேலும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அரசியலமைப்பின் மீதான கடுமையான தாக்குதலாக இந்த நிகழ்வு நடந்தேறி உள்ளது. சபாநாயகர் அவர்கள் நடுநிலைத்தன்மை என்ற தனது நிலைப்பாடு பற்றிய சிந்தனையே இல்லாதவராக, உள் நோக்கத்துடன், ஆளும் கட்சியின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக வளைந்து கொடுத்து செயல்பட்டு இருக்கிறார்.

 

 

கடந்த 1988 ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ஆளும் கட்சியின் இரு பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக இதேபோன்று சபாநாயகர் செயல்பட்ட நிலையில், அப்போதைய ஆளுநர் அவர்கள், அதனை செல்லாதது என்றும் முறையற்றது என்றும் கூறி தகுதியிழக்கச் செய்வதாக அறிவித்தார்.

எனவே, 18-02-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, எந்தவொரு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சட்டசபையில் இல்லாத நேரத்தில் வெளியிடப்பட்டு இருப்பதையும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தயவுகூர்ந்து பரிசீலித்து, ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுக்காகும் வகையில், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, சட்டப்படி உரிய நீதியை வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை