சட்டசபை பரபரப்பு நிமிடங்கள்!

தினமலர்  தினமலர்
சட்டசபை பரபரப்பு நிமிடங்கள்!

தமிழக அரசியல் வரலாற்றில் பதிவுபெற்ற முக்கிய நாளாக நேற்று (18 ம் தேதி) இருந்தது. சட்டமன்ற வளாகத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வந்ததது முதல் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. அவற்றின் தொகுப்பு இதோ:
காலை, 9:57 மணி: சட்டசபை கூட்ட அரங்கிற்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வந்தார். அவருக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக, அவர் வெளியே புறப்பட்டு சென்றார்.

10:08: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரத் துவங்கினர்.
10:12: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, பாண்டியராஜன் வந்தனர்.

10:16: துரைமுருகன் மீண்டும் வந்தார். இருக்கையில் அமர்ந்து, பிரணாயமம் என்ற மூச்சு பயிற்சியை மேற்கொண்டார்.

10:20: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் வந்தார்.

10:25: அமைச்சர்கள் வந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர், செம்மலையிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஏதோ கூற, செம்மலை மறுப்பு தெரிவித்தார்.

10:34: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் வரிசையாக வந்தனர்.

10:40: தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முதல்வர் அலுவலக செயலர்கள் வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்.

10:44: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வந்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர்.
10:50: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வந்தார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அவர் வந்ததை கவனிக்காதது போல இருந்தனர்; தி.மு.க.,வினர் வணக்கம் தெரிவித்தனர்.

10:51: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வந்து, தன் இருக்கையில் அமர்ந்தார். அப்போது, தி.மு.க.,வினர், 'வா சிங்கம் வா... தன்மான சிங்கமே வா' என்றனர்.

10:51: முதல்வர் இடைப்பாடி பழனிசாமி வந்தார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எழுந்திருக்கவில்லை.

11:00: சபாநாயகர் வந்தார். சட்டசபை துவங்கியது.

பகல், 12:02 மணி: தி.மு.க.,வினர் ரகளை துவங்கியது.

12:11: சட்டசபை, பகல், 1:00 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்துவிட்டு வெளியேறினார்.

12:15: அமைச்சர்கள் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், சபாநாயகர் அறைக்கு சென்றனர்.

1:00 : மீண்டும் சட்டசபை கூடியது.

1:13 : மீண்டும் ரகளை ஆரம்பமானது.

1:33 : தி.மு.க.,வினரை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின், மாலை, 3:00 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

2:45 : சட்டசபை உள்ளே அமர்ந்திருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

மாலை, 3:00 மணி: சட்டசபை மீண்டும் கூடியது. ஓட்டெடுப்பு துவங்கியது.

3:22: ஓட்டெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

3:30: சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. மீண்டும் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை