தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது 'இ - மெயில்'

தினமலர்  தினமலர்
தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது இ  மெயில்

கோவை : 'தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்' என, ராஜ்பவனுக்கு 'இ - மெயில்'கள் குவிகின்றன.

தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழலில், 'கவர்னரின் ராஜ்பவன், இ - மெயில் முகவரிக்கு, தமிழக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்' என, முகவரியுடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

கோவையில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நேற்று, கவர்னரின் இ - மெயில் முகவரிக்கு தங்களுக்கு கருத்தை தெரிவித்தனர். இதில், 'முற்றிலும் விரோதமான, விரும்பத்தகாத ஆட்சி அமைந்துள்ளது. இவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. தற்போது தமிழகத்தை நீங்கள் மட்டும் தான் காக்க முடியும்.

தமிழக மக்களின் கருத்தை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுஉள்ளது. இதேபோல், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

கவர்னருக்கு கடிதம்: கமல் யோசனை

'மன உளைச்சலை, கவர்னருக்கு கடிதமாக எழுதுங்கள்' என, கமல் கூறியுள்ளார்.சட்டசபை ஓட்டெடுப்புக்கு பின், 'டுவிட்டர்' வலைதளத்தில் கமல், 'கவர்னரின் மின்னஞ்சல் முகவரிக்கு, மன உளைச்சலை தெரியப்படுத்துங்கள். அதில், மரியாதையாக பேச வேண்டும். அது, சட்டசபை அல்ல; கவர்னர் வீடு' என, கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் கூறியுள்ளதாவது:இந்நாள் ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடானது. அப்படியே சிறையில் உள்ள சசிகலாவிற்கு, ஒரு லேப்டாப் கொடுத்து விடுஙகள். நான்கு ஆண்டுகளுக்கு, இடைப்பாடி பழனிசாமி போக்குவரத்து செலவு மிச்சமாகும். நம் உணவில், இன்னும் அதிகமாக உப்பை போட வேண்டிய நேரம் இது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை