ஜெயித்தது ஆட்சி; வெடிக்குமா புரட்சி! கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன்... தொகுதிக்கு வரும்போது தெரியும் உண்மை நிலை!

தினமலர்  தினமலர்
ஜெயித்தது ஆட்சி; வெடிக்குமா புரட்சி! கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன்... தொகுதிக்கு வரும்போது தெரியும் உண்மை நிலை!


கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், சசிகலாவின் 'பினாமி'யாகக் கருதப்படும் இடைப்பாடி பழனிச்சாமியின் அரசு, நேற்று வெற்றி பெற்றது. இதனால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க., -- ஜெ., மறைவுக்குப் பின், இரு அணிகளாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட பன்னீர் செல்வம் தலைமையில் ஓர்அணியும் உருவாயின. கொங்கு மண்டல மக்கள், ஜெ., தலைமையிலான அ.தி.மு.க.,வை அமோகமாக ஆதரித்து வந்தவர்கள் என்ற முறையில், இவர்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
புதைந்தது நம்பிக்கை...ஏற்கனவே, கொங்கு மண்டலத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, ஐந்தாண்டுகளில் அதை நிறைவேற்றாத நிலையிலும், கடந்த சட்டசபை தேர்தலிலும் அக்கட்சியை பெரும்பாலான தொகுதிகளில், ஜெயிக்க வைத்தவர்கள் இந்த மக்கள். ஜெ., மீது கொங்கு மண்டல மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும், பாசமுமே, அதற்கு முக்கியக் காரணம். ஆனால், ஜெ., புதைக்கப்பட்டபோதே, அந்த நம்பிக்கையும் புதைந்து விட்டது.
ஜெ., சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில், அவர் உடல் நலம் பெறுவதற்காக, அதிகளவிலான வேண்டுதல்களை நிஜமான அக்கறையுடன் நடத்தியது, கொங்கு மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் தான்.
அத்தகைய உண்மைத் தொண்டர்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க.,வில், ஜெ., மறைவுக்குப் பின் நடந்த பல்வேறு சம்பவங்கள், அந்த தொண்டர்களை விரக்தியடைய வைத்து விட்டன.அதில் முக்கியமானது, ஜெ., நியமித்த பன்னீரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியது; சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தது, முதல்வராக தேர்வு செய்தது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் முதல்வர் வாய்ப்பு பறிபோனதும், பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தது, ஜெ., நீக்கிய தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக அறிவித்தது என, அடுத்தடுத்து நடந்தவை, அந்தத் தொண்டனை கொதிப்படைய வைத்தன.
பினாமி ஆட்சி!இந்த சூழ்நிலையில் தான், ஜெ., மீதான நம்பிக்கையில் தாங்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ., ஒவ்வொருவரும், பன்னீரை ஆதரிக்க வேண்டும் அல்லது சசிகலாவின் பினாமியாகக் கருதப்படும் பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று இங்குள்ள மக்களும், தொண்டர்களும் எதிர்பார்த்தனர். இதை, சமூக வலைதளங்களிலும் தங்களது கருத்தாக பதிவு செய்தனர்.
மக்கள் மற்றும் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, மற்றவர்களுக்கு முன்னோடியாக, பன்னீரை ஆதரித்தார். அவரைப் பின்பற்றி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்ராஜ் வந்தார்; கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண் குமார், சட்டசபையில் நேற்று காலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சசிகலா தலைமையைக் கண்டித்து, அதில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார்.
மூவருக்கு வரவேற்பு!இவர்கள் மூவருக்கும் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவர்களைத் தவிர, கோவை மாவட்டத்தில் ஆறு தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகள், நீலகிரியில் குன்னுார் தொகுதி என மொத்தம் 12 தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களும், நேற்று நடந்த வாக்கெடுப்பில் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து, சசிகலாவின் 'பினாமி அரசு' ஜெயிப்பதற்கு உதவியுள்ளதாக தொண்டர்களிடம் குமுறல் வெடித்துள்ளது.
இனிமேல், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்துடன் தமிழக அரசு நடைபெறும் என்பதால், இத்தகைய ஆட்சி அமைவதற்கு உதவியாக இருந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், மூன்று மாவட்ட மக்களும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
சட்டசபையில், பழனிச்சாமிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சியினரால் குற்றம்சாட்டப்படும் சபாநாயகர் தனபால் மீதும், மக்களின் கோபம் திரும்பியுள்ளது.ஏனெனில், அவரும் இதே கொங்கு மண்டலத்திலுள்ள அவிநாசி தொகுதியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தின் மீது கல்வீச்சு நடந்துள்ளது. பணம், பதவி அல்லது கட்சி எதற்காக இந்த முடிவை இந்த எம்.எல்.ஏ.,க்கள் எடுத்திருந்தாலும், இனிமேல் தொகுதி மக்களை இவர்கள் சந்திப்பது, அத்தனை எளிதில்லை; போலீஸ் துணையுடன், தொகுதிக்குள் இவர்கள் வருவதே, பாதுகாப்பானதாக இருக்கும்.
பெண்களிடம் பெரும் கோபம்!

அசாதாரணமான அரசியல் சூழ்நிலைகளில், ஆண்கள் மட்டுமே, விருப்பையும், வெறுப்பையும் வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது, ஆண்களை விட பெண்களே, சசிகலா தலைமையின் மீதும், அவரது ஆதரவு பெற்றுள்ள அரசின் மீதும் அதீதமான கோபத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில், பதிவிட்டுள்ள கருத்துக்கள், பெண்களிடம் மறைந்து கிடக்கும் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதாகவுள்ளன. அதிகாரத்திற்கு எதிராக ஆண்கள் போராடினால், போலீசை வைத்து அரசியல்வாதிகள் அடக்குவர். ஆனால், பெண்களின் கோபத்தை, இந்த மக்கள் பிரதிநிதிகள் சமாளிப்பது, சாதாரண விஷயமில்லை. -நமது நிருபர்-

மூலக்கதை