கருவேலமரங்களால் உருவாகுது வறட்சி:இசைவார்களா இளைஞர்கள்:நிலத்தடி நீரினைகாக்க வழி காண்போமே

தினமலர்  தினமலர்

ஸ்ரீவில்லிபுத்துார்:நீதிமன்ற உத்தரவின்படி வறட்சிக்கு காரணமான கருவேலமரங்களை அரசு நிர்வாகம் அகற்றி வரும் நிலையில், அதை முழுஅளவில் அகற்றி, இயற்கையை காக்கவும், மாசில்லா நகரங்களை உருவாக்கவும் அதிக பயன்தரும் மரங்களை தங்கள் பகுதிகளில் வளர்க்க இன்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும்.
இயற்கையை பாதித்து, நீர் வளத்தை குறைத்து, வறட்சியை அதிகரிக்கும் வகையில் அதிகளவில் கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் ஏழைமக்கள் வீடுகளில் அடுப்பெரிக்க உதவியாக இருந்த கருவேலமரங்கள், காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியால் மக்கள், காஸ் மற்றும் மின்சார அடுப்புகளை பயன்படுத்த துவங்கியபின், கருவேல மரங்களின் பயன்பாடு குறையத்துவங்கியது.
நீதிமன்றம் அதன் தேவைகள் குறைந்து வரும் நிலையில் மரங்களின் எண்ணிக்கை குறையாததால் நிலத்தடி நீர் மட்டம் குறையத்துவங்கியது. அதிலும் இந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில் நீர் ஆதாரங்கள் வற்றி வருகிறது. எதிர்வரும் மாதங்களில் மக்களின் குடிநீர் தேவையை சமாளிப்பதே சவாலான விசயமாக இருக்கும். இந்நிலையில் கருவேலமரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அரசு மற்றும் தனியார் நிலங்களில் இருக்கும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இது நுாறு சதவீதம் வெற்றி பெற்றால் மட்டுமே மனித சமுதாயத்திற்கு நல்லது.
வளம் தரும் மரங்கள் ஒவ்வொரு அரசுத்துறையும் தங்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கருவேலமரங்களை அகற்றி வந்தாலும், இன்னும் பல இடங்களில் கருவேமரங்கள் காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நீர்வரத்து பாதைகள், கண்மாய்கள், ஆள்நடமாட்டமில்லா பகுதிகள் என பல்வேறு இடங்களிலும்கருவேல மரங்கள் சிறியதும், பெரியதுமாய் காணப்படுகிறது. தற்போது ஏராளமான இளைஞர்களும், பொதுநல அமைப்புகளும் கருவேலமரங்களை ஒரு சில இடங்களில் மட்டுமே அகற்றி வருகின்றனர். இதில் அனைத்து தரப்பு இளைஞர்கள்,பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் இணைந்து பங்கேற்றால் முழுஅளவில் வெற்றி பெறமுடியும். இதன் மூலம்மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றபட்டு, வளமை தரும் மரங்கள் வளர்க்கபட்டால், பசுமை நிலவும்.
பொதுநல அமைப்புகள்விருதுநகர் கலெக்டராக இருந்த சிஜிதாமஸ் வைத்யன் பணியாற்றியபோது, மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, மனித சமுதாயத்திற்கும் பலன் தரும் மரங்களை வளர்க்கும் பணியை மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள பொதுநல அமைப்புகளின் உதவியுடன் துவக்கினார்.
ஆனால், அவரின் பணியிட மாற்றத்திற்கு பின் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்திரவின்படி கருவேலமரங்களை அகற்றி வருவது முழுவெற்றி பெற இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட கருவேலமரங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த இன்றைய பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டும், மக்களுக்கு பயன்தரும் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து விருதுநகர் மாவட்டமும் ஒரு வளமையான மாவட்டமாக மாற உறுதுணையாக இருக்கவேண்டும்.
5 கி.மீ., துாரம் ஸ்ரீவில்லிபுத்துார் குருசாமிபாண்டியன்,சாதாரண கருவேல மரங்கள் கூட நிலத்தடியில் 5 கி.மீ.,துாரம் தனது வேர்களை பரப்பும் தன்மையுடையது. இதனால் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்படுவதால், கருவேல மரங்கள் அகற்றி, மனித சமுதாயத்திற்கு பலன் தரும் மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியமாகிறது. இதற்கு ஒருபுறம் கருவேலமரங்களை அகற்றவும், மறுபுறம் பயன்தரும் பல்வேறு மரகன்று, மருத்துவகுணமிக்க செடிகளை வளர்க்கலாம். இதை அரசு நிர்வாகங்கள் ஒருபுறம் செய்தாலும், இளைஞர்களும் முழுஅளவில் பங்கேற்று செயல்படுத்திட முன்வரவேண்டும்,''என்றார்.

மூலக்கதை