சொட்டு நீர்பாசன மானியம் ரூ.4.89 கோடி தேக்கம்:ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கியது

தினமலர்  தினமலர்
சொட்டு நீர்பாசன மானியம் ரூ.4.89 கோடி தேக்கம்:ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கியது

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசன அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.4.89 கோடி மானியம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.வறட்சி காலங்களில், வறட்சியான பகுதிகளில் விவசாயிகள் பயன்பெற மத்திய அரசின் சார்பில், பிரதம மந்திரியின் சொட்டு நீர் பாசன திட்டம் அமல்படுத்தப்பட்டது. வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆண்டுதோறும் இதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ.4.89 கோடி தேக்கம்: இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஒதுக்கப்பட்ட மானியம் ரூ.4.89 கோடி பயன்படுத்த முடியாமல் உள்ளது. திண்டுக்கல்லில் கடந்த 3 ஆண்டுகளாக பெய்த மழையளவு குறைவு. இதனால் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குளம், கண்மாய், கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதால் சொட்டு நீர் பாசனமும் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாகவே ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் வாங்க ஆள் இல்லாமல் பயனின்றி கிடக்கிறது. சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இந்நிதியை பயன்படுத்த முடியும் என்பதால், பிற தேவைக்கும் பயன்படுத்த முடியாமல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.
அதிகாரிகள் அழைப்பு: தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம் கூறியதாவது: பொது பிரிவு, சிறு, குறு விவசாயிகள் வறட்சி காலத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குகிறது. இதில் ஆதிதிராவிடர் ரூ.4.89 கோடி, பழங்குடியின விவசாயிகளுக்கான நிதி ரூ.11 லட்சம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவ்விவசாயிகள் தோட்டக்கலை மட்டுமின்றி வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யவும் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தலாம். சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
இதை வலியுறுத்தி அதிகாரிகள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இருப்பினும், தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர், என்றார்.

மூலக்கதை