தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - போலீஸ் கட்டுப்பாட்டில் தலைமை செயலகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு  போலீஸ் கட்டுப்பாட்டில் தலைமை செயலகம்

சென்னை- தமிழக சட்டசபையில் இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8. 45 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகம் வந்தார்.

அவரை தொடர்ந்து. 9. 05 மணியளவில் திமுக எம்எல்ஏக்கள் வர தொடங்கினர்.


தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி மெரினா, போர் நினைவு சின்னம் அருகே இருந்து தலைமை செயலகம் வரையும், சென்னை அரசு மருத்துவ கல்லூரியின் செவிலியர் விடுதியில் இருந்து தலைமை செயலகம் வரையும், ரிசர்வ் வங்கியில் இருந்து தலைமை செயலகம் வரையும் இரு புறமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அதிரடி படை போலீசாரும் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.
தலைமை செயலகத்தை சுற்றி மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர், தலைமை செயலகத்திற்கு நுழையும் 2 நுழைவாயில்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமே தலைமை செயலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல், தலைமை செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் 3 அடுக்கு பேரிகார்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எந்த வாகனமும் தலைமை செயலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் அனைத்தும் தலைமை செயலகம் எதிரே உள்ள மைதானத்தில் நிறுத்தும்படி போலீசார் அறிவுறுத்தினர்.


தலைமை செயலகத்திற்குள் நுழைவோர் தகுந்த அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்னர்.
தலைமை செயலகத்திற்கும் 5 அடுக்கு பேரிகார்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. தலைமை செயலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு கெடுபிடி: பத்திரிக்கையாளர்கள் நேரலை வாகனங்கள் தலைமை செயலகத்திற்குள் அனுமதிப்பது வழக்கம்.

ஆனால், அவர்களுடைய வாகனங்கள் இன்று காலை முதல் அனுமதிக்கப்படவில்லை, பத்திரிக்கையாளர் அறையில் இருந்து சட்டப்பேரவைக்குள் நுழையும் வாயிலில் எம்எல்ஏக்கள் செல்வதை யாரும் படம் பிடித்து விட கூடாது என்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்தனர்.

மேலும் பத்திரிக்கையாளர்கள் அறையின் அருகே உள்ள நுழைவு வாயிலும் இழுத்து மூடப்பட்டது. இதனால், பத்திரிக்கையாளர்கள் போலீசாருடன் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை செயலகத்திற்கு செல்ல 4 நுழைவு வாயில்கள் உள்ளன.

அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டினால் தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று போலீசார் கூறினர். சில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை கொண்டு வரவில்லை.

அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர்.


.

மூலக்கதை