ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி கேட்கிறது கர்நாடகா - தமிழக அரசுக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி கேட்கிறது கர்நாடகா  தமிழக அரசுக்கு கடிதம்

பெங்களூரு- ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு நடத்துவதற்கு கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 12 கோடியை வழங்குமாறு கோரி தமிழக அரசுக்கு அம்மாநில அரசு  கடிதம் எழுதியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகியோர்  மீதான சொத்து குவிப்பு வழக்கு முதலில் சென்னையில் நடைபெற்று  வந்தது.

வழக்கு நிலுவையில் உள்ள போது, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததால் இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி சுப்ரீம்  கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

கடந்த 2004 ம் ஆண்டு முதல் சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வரை வழக்கு விசாரணைக்கான செலவுகளை  கர்நாடக அரசு செய்துள்ளது.

தற்போது இந்த செலவு மொத்தம் ரூ. 12. 04 கோடி என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், ‘ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ. 3. 78 கோடியும், சிட்டி சிவில் கோர்ட்டுக்கு ரூ. 2. 86  கோடியும், கர்நாடக ஐகோர்ட்டுக்கு ரூ. 4. 68 கோடியும், போலீஸ் பாதுகாப்புக்கு ரூ. 70. 33  லட்சமும் செலவாகியுள்ளன. இத்துடன் வக்கீல்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக அரசுக்கு மொத்தம் ரூ. 12. 04 கோடி செலவாகி  உள்ளது. இந்த செலவு தொகையை வழங்க கோரி தமிழக அரசுக்கு கர்நாடக அரசு  சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்.


.

மூலக்கதை