உ.பி.க்கு வளர்ப்பு மகன் தேவையில்லை - மோடியை தாக்கிய பிரியங்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பி.க்கு வளர்ப்பு மகன் தேவையில்லை  மோடியை தாக்கிய பிரியங்கா

லக்னோ- ‘உத்திரபிரதேசத்தின் நலனை எப்போதும் உள்ளத்திலும், எண்ணத்திலும் கொண்டுள்ள ராகுல், அகிலேஷ் போன்ற இரு மகன்கள் இருக்கும் போது, உ. பி. க்கு வெளிமாநிலத்தை சேர்ந்த வளர்ப்பு மகன் தேவையில்லை’ என்று  பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கியுள்ளார். உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா, தனது தாயின் மக்களவை தொகுதியான ரேபரேலி பகுதியில் நேற்று காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்த பிரியங்கா, நேற்று முதன்முறையாக கட்சி தொண்டர்களிடையே பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பிரதமர் மோடி, தன்னை உத்திரபிரதேசம் தத்து எடுத்து கொண்டது என்றும், மாநில வளர்ச்சிக்கு உழைக்க போவதாகவும் தெரிவித்தார். வெளிமாநிலத்தில் இருந்து மகன்களை தத்தெடுக்கும் நிலையில் உ. பி மாநிலம் இல்லை.



மாநிலத்தை மாற்றி அமைக்கும் சக்திகளாக இங்குள்ள இளைஞர்களே இருக்கின்றனர். உ. பி நலனை எப்போதும் உள்ளத்திலும், எண்ணத்திலும் கொண்டுள்ள ராகுல், அகிலேஷ் போன்ற இளைய தலைவர்கள் உள்ளனர்.

பிரதமர் வாரணாசி தொகுதிக்கு என்ன செய்துள்ளார்? ராஜிவ் காந்தி ஒரு பிரதமராக அமேதி தொகுதியின் முன்னேற்றத்திற்காக ஏராளமானவற்றை செய்துள்ளார். உ. பி மாநிலத்தின் மேம்பாட்டை உறுதிசெய்ய காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா பேசினார். முன்னதாக பிரதமர் மோடி பிரசாரத்தின் போது, ‘உ. பிக்கும் எனக்கும் நெருங்கிய பந்தம் உள்ளது.

உ. பியில் பிறந்த கிருஷ்ணாவிற்கு குஜராத் கரும பூமி ஆனதுபோல், குஜராத்தை சேர்ந்த எனக்கு உ. பி தாயகமாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

அதற்குத்தான் பிரியங்கா பதிலடி கொடுத்தார்.

.

மூலக்கதை