சிவபால் யாதவ் தொகுதி உள்பட உ.பி.யில் 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிவபால் யாதவ் தொகுதி உள்பட உ.பி.யில் 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

லக்னோ- உத்தரபிரதேசத்தில் 3ம் கட்டமாக, நாளை 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் சிவபால் யாதவ் போட்டியிடும் ஜஸ்வந்த் நகர் தொகுதியும் ஒன்று.

உத்தரபிரதேசத்தில் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கும். கடந்த 15ம் தேதி 67 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது.

3வது கட்டமாக நாளை, 69 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தின் முக்கிய மாவட்டங்களான கான்பூர், லக்னோ, உன்னாவ், ஜான்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன.

3வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. கர்டோய், பாரபங்கி உள்ளிட்ட பகுதிகளில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தார்.

லக்னோவில் சமாஜ்வாடி வேட்பாளர்களை ஆதரித்து அகிலேஷ், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

3வது கட்ட தேர்தலில் 105 பெண்கள் உள்பட 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் 813 பேர் தங்களது சொத்து மற்றும் குற்ற வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 110 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

மேலும் 250 வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. குற்ற வழக்குகள் உள்ள 110 பேரில் 82 பேர் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பாஜவை சேர்ந்த 21 பேர், பகுஜன் சமாஜ் 21, ஆர்எல்டி 5, சமாஜ்வாடி 13, காங்கிரஸ் 5, சுயேட்சைகள் 13 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மொத்தம் 2 கோடியே 41 லடச்த்து 67 ஆயிரத்து 407 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 25 ஆயிரத்து 606 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெற உள்ள மெயின்புரி, எடாவா, கன்னோஜ் ஆகியவை முலாயம் குடும்பத்தினரின் செல்வாக்கு உள்ள தொகுதிகளாக கருதப்படுகிறது.

கன்னோஜ் லோக்சபா தொகுதி எம்பியாக அகிலேஷின் மனைவி டிம்பிள் இருந்து வருகிறார். மெயின்புரி எம்பியாக அகிலேஷ் உறவினர் தேஜ்பிரதாப் யாதவ் உள்ளார.

லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் டிம்பிளின் சகோதரி அபர்ணா யாதவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அண்மையில் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு சென்ற ரீட்டா பகுகுணா ஜோஷி மோதுகிறார்.

சமாஜ்வாடியின் மற்றொரு முக்கிய தலைவரான சிவபால் யாதவ் போட்டியிடும் ஜஸ்வந்த் நகர் தொகுதியிலும் நாளை வாக்குபதிவு நடைபெறுகிறது.

69 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

.

மூலக்கதை