எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் திரும்பியது எப்படி? சத்தியமூர்த்திபவனில் நடந்த விறுவிறு காட்சிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் திரும்பியது எப்படி? சத்தியமூர்த்திபவனில் நடந்த விறுவிறு காட்சிகள்

சென்னை- காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்தது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகின்றனர்.

இதில் சசிகலா தரப்பை சேர்ந்த  எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க வைத்த கவர்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று காலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் என்ன முடிவு எடுப்பது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களாக விவாதம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சசிகலா ஆதரவு அணியினர் மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் கோரியுள்ளனர்.

இதையடுத்து, மூத்த தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ராகுல்காந்தி ஆலோசித்தார்.

திருநாவுக்கரசர், சுதர்சனநாச்சியப்பன், தங்கபாலு ஆகியோர் சசிகலா அணியை ஆதரிக்க வலியுறுத்தியுள்ளனர். இளங்கோவன், சிதம்பரம், கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், ஜெயக்குமார், செல்லக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், திமுக நிலைப்பாட்டை பின்பற்றக் கூறினர்.

அதன்பின், ‘யாருக்கு ஆதரவு என்று இப்போது சொல்ல வேண்டாம். வாக்கெடுப்புக்கு முதல்நாள் முடிவு செய்யலாம்’ என்று ராகுல் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. எம்எல்ஏக்கள் 7 பேர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவருமே சேர்ந்து, ‘‘சசிகலா அணிக்கு எதிராக மக்கள் உள்ளனர். இதனால் நாமும் எதிராக வாக்களிக்க வேண்டும்’’ என்றனர்.

எனினும், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு ஆகியோர் மட்டும் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதம் குறித்து ராகுல்காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் நேற்றிரவே, திமுக ஆதரவு நிலையை எடுத்து அறிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை தெரிவிப்பதற்காக இன்று காலையில் 9. 30 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது.
இதில் ராகுல்காந்தியின் முடிவுப்படி எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் சட்டமன்றம் புறப்பட்டுச் சென்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் மட்டும் வெளிநாடு சென்று விட்டு காலையில்தான் சென்னை வந்தார்.

அவரும் சட்டமன்றத்துக்கு வந்தார்.

அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

.

மூலக்கதை