கூவத்தூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ராகு காலத்துக்கு முன்பு புறப்பட்ட எம்எல்ஏக்கள் - 4 பேருக்கு ஒரு அமைச்சர் புடைசூழ கோட்டைக்கு சென்றனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூவத்தூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ராகு காலத்துக்கு முன்பு புறப்பட்ட எம்எல்ஏக்கள்  4 பேருக்கு ஒரு அமைச்சர் புடைசூழ கோட்டைக்கு சென்றனர்

சென்னை- சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்சில் இருந்து சட்டபேரவைக்கு எம்எல்ஏக்கள் கார்களில் புறப்பட்டனர். அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் உருவானது.

இதன்பின், பல எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து, தங்கள் அணியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் அணிக்கு தாவாமல் தடுக்க அனைவரையும் சசிகலா தரப்பினர் கடத்திச் சென்றனர்.

அவர்களை கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்சில் தங்க வைத்தனர். எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஆட்சி அமைக்க கோரி இருந்த சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சசிகலா தரப்பு சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பொறுப்பேற்றார்.      

இன்று காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டபேரவை கூட்டம் நடந்தது.

சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10. 30 மணி வரை ராகு காலம் என்பதால், கூவத்தூர் ரிசார்ட்சில் இருந்து அனைத்து எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் காலை 8 மணிக்கே கார்களில் சட்டபேரவைக்கு புறப்பட்டனர். ஒவ்வொரு அமைச்சரின் காரிலும் 3, 4 எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.

4 அமைச்சர்களின் கார்களுக்கு ஒரு பாதுகாப்பு வாகனம் என்று சசிகலா ஆதரவாளர்களின் கார்களும் பின்தொடர்ந்தன.   சைரன் போட்டபடி சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் காரில் முன்பக்க இருக்கையில் நடிகர் கருணாஸ் அமர்ந்திருந்தார். குறிப்பாக பெண் எம்எல்ஏக்களை பெண் அமைச்சர்கள் நிலோபர்கபில், வளர்மதி, சரோஜா, ராஜலட்சுமி ஆகியோர் அழைத்து சென்றனர்.

காரில் செல்லும் போது கூட, எம்எல்ஏக்களை யாரிடமும் செல்போனில் பேசவிடாமல் தடுத்தனர். மொத்தம் 31 கார்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அணிவகுத்து சென்றனர்.

காலை 8. 25 மணிக்கு ரிசார்ட்ஸ் காலியானது.

முன்னதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வோம்’’ என்றார்.
ஒருவர் தப்பி ஓட்டம் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றது முதல், ரிசார்ட்சில் கெடுபிடி குறைந்தது. எம்எல்ஏக்களை அவர்களது உறவினர்கள் பார்க்க செல்வதும், சாப்பாடு கொண்டு செல்வதும், அவர்களுக்கு தேவையான மாற்று உடைகள் கொண்டு செல்வதுமாக இருந்தது.

இந்த சமயத்தை பயன்படுத்தி கொண்டு, கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார், நள்ளிரவில் ரிசார்ட்சை விட்டு தப்பி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இங்கு இருப்பது எனக்கு மன உளைச்சலை அளிக்கிறது.

தொகுதிக்கு சென்று மக்களை சந்திப்பேன்’’ என்றார். இதனால் பரபரப்பு அதிகரித்தது.

ரிசார்ட்சில் இருந்து எம்எல்ஏக்கள் அழைத்து செல்லப்பட்டதும், அவர்களின் உறவினர்கள், எம்எல்ஏக்களின் உடமைகளை எடுத்து கொண்டு சென்றனர்.

அதன் பிறகு, சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் ரிசார்ட்சை  தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிச்சை கேட்டது அபசகுனமா? எம்எல்ஏக்களை ஏற்றி கொண்டு ஒவ்வொரு காராக ரிசார்ட்சை விட்டு வெளியேறிய போது, முதல் காராக அமைச்சர் வீரமணியின் கார் வெளியே வந்தது.

அப்போது வாசலில் நின்றிருந்த ஒரு பிச்சைக்காரர், ‘ஐயா பிச்சை போடுங்கள்’ என்று அமைச்சரிடம் கேட்டார். இதை பார்த்ததும் கடுப்பான அமைச்சர், ‘‘போகும்போதே அபசகுனமா வர்றியே. . . ’’ என்று கூறி, அந்த பிச்சைக்காரனை விரட்ட சொன்னார்.

இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை