காரை சோதனையிட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏக்களுடன் நடந்து சென்ற ஸ்டாலின் - கோட்டை முன் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காரை சோதனையிட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏக்களுடன் நடந்து சென்ற ஸ்டாலின்  கோட்டை முன் பரபரப்பு

சென்னை- கோட்டைக்கு வெளியே தனது காரை போலீசார் சோதனையிட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று காலையில் திமுக எம்எல்ஏக்களுடன் நடந்தே சட்டசபைக்குள் சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலில் இருந்து 100 அடி தூரத்திற்கு முன்பு போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

மேலும், கோட்டைக்கு செல்லும் சாலையில்  எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் கார்கள் செல்ல தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 9. 40 மணியளவில் திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர்.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலினின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

உடனே திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கி வந்து போலீசாரிடம், ‘எதிர்க்கட்சித் தலைவர் காரையே சோதனையிடுவதா?’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அதிமுக அரசை கண்டித்தும், சசிகலாவை கண்டித்தும் மு. க,ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பியவாறு கோட்டைக்குள் நடந்தே சென்றனர்.

சட்டமன்றத்தின் 4 வது நுழைவு வாயில் வரை கோஷமிட்டவாறு சபைக்குள் சென்றனர், இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை படம் பிடிக்க பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் ஓடி வந்தனர்.

ஆனால், அவர்களை அருகில் நெருங்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது, பத்திரிக்கையாளர்கள் “எங்களை ஏன் தடுக்கீறீர்கள்.

நாங்கள் எங்கள் கடமையை தானே செய்கிறோம்” என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இருப்பினும், போலீசார் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.


.

மூலக்கதை