அதிமுக பொது செயலாளராக தேர்வானது செல்லுமா? சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக பொது செயலாளராக தேர்வானது செல்லுமா? சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சென்னை- அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றதை ரத்து செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் மனு அளித்தனர். இது பற்றி வரும் 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்ததும், அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்பி மைத்ரேயன் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர், டெல்லியில் நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை சந்தித்து, 42 பக்க மனு ஒன்றை தந்தனர்.

அதில், ‘பொதுக்குழுவால், கட்சியின் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியாது.

மேலும், கட்சியின் சட்டவிதி 30(வி)ன்படி 5 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும்.

ஆனால் சசிகலா 2011ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பிறகு, 2012ம் ஆண்டு மார்ச்சில்தான் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். அவர் அடிப்படை உறுப்பினராக 5 ஆண்டுகள் நிறைவு செய்யவில்லை.

எனவே அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இது தொடர்பாக சசிகலாவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

வரும் 28ம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும்.

அப்படி பதில் தரவில்லை என்றால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறை முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

.

மூலக்கதை