சசிகலா குடும்பத்துக்கு எதிராக மெரினாவில் திரள மாணவர்கள் திட்டம் - போலீஸ் குவிப்பால் பதற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சசிகலா குடும்பத்துக்கு எதிராக மெரினாவில் திரள மாணவர்கள் திட்டம்  போலீஸ் குவிப்பால் பதற்றம்

சென்னை- சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக மெரினா கடற்கரையில் மாணவர்கள் இன்று ஒன்று கூட திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் அதற்கு நிரந்தர சட்டம் கொண்டுவரக்கோரியும் ஜனவரி 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒன்று திரண்டனர்.

இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, சமூக பிரச்சனைகள் பலவற்றுக்கு இனி வரும் காலங்களில் ஒன்றிணைந்து போராடுவோம் என்று மாணவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓ. பன்னீர் செல்வம் தன்னை முதல்வர் பதவியை சசிகலா தரப்பினர் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர் என்று பேட்டியளித்தார்.

இதைத்தொடர்ந்து, சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்து சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

அப்போதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி தப்பும். இந்தநிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “மன்னார்குடி உறவினர்களிடம் தமிழகம் சிக்கியுள்ளது.



அந்த கும்பலிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இதனால், மெரினாவில் ஒன்றுகூட வேண்டும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த தகவலையடுத்து, நேற்று முதல் மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள், சந்தேகம்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். போராட்டம் நடத்த யாராவது மெரினாவிற்கு வருகிறார்களா என்று தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மெரினா கடற்கரையில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை