அரசு பள்ளி மாணவர்கள் குடிபோதையில் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு பள்ளி மாணவர்கள் குடிபோதையில் மோதல்

வேலூர்- டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகளும் குடிபோதைக்கு அடிமையாவது பெற்றோர் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அலமேலுமங்காபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் குடிபோதையில் வந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று குடிபோதையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் கொணவட்டம் அரசு பள்ளியில் இருந்து உணவு இடைவெளியில் வெளியே சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் இடைவேளை முடிந்து குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சக மாணவர்களையும் 10ம் வகுப்பு மாணவர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது நண்பர்களும் சக மாணவர்களிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் பள்ளியை விட்டு வெளியேறி பள்ளிக்கு அருகில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்களாம்.

அவ்வழியாக சென்ற ஒருவர் மாணவர்களை விலக்கிவிட முயன்றுள்ளார். அப்போது, தடுக்க முயன்றவரையும் போதை மாணவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் குடிபோதையில் இருந்த மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


.

மூலக்கதை