குடும்ப ஆட்சி கூடாது !!! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் இறுதி வேண்டுகோள்

PARIS TAMIL  PARIS TAMIL
குடும்ப ஆட்சி கூடாது !!! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் இறுதி வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் இன்று சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கிறது. இதில் தங்களது பலத்தை நிரூபிப்பது குறித்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் மதுசூதனன், சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், கே.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். நேற்று இரவு வரை இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

குடும்ப ஆட்சி கூடாது

ஜெயலலிதாவின் பாசத்துக்கும், அன்புக்கும் உரிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணிவான, அன்பான வேண்டுகோள். நம்மை எல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கி முகவரி கொடுத்தவர் அம்மா. தமிழகத்தில் குடும்ப ஆட்சி வரக்கூடாது என்று தன்னுடைய உடல்நலத்தையும் கருதாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நம்மை எம்.எல்.ஏ.வாக ஆக்கினார்.

குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்பது ஜெயலலிதாவின் கொள்கை. அவரது கொள்கைக்கு புறம்பாக குடும்ப ஆட்சிக்கு உறுதுணையாக நீங்கள் (சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்) இருக்கலாமா? இது ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா? ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என்று உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் மனம்மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எதிராக வாக்களியுங்கள்

சட்டசபையில் நாளை (இன்று) நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாக இருந்து சுதந்திரமாக சிந்தித்து ஜெயலலிதாவை ஒருமுறை நினைத்துப்பார்த்து வாக்களிக்க வேண்டும். யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். மக்களின் வெறுப்புக்கு உள்ளாகாதீர்கள்.

ஜெயலலிதாவின் எண்ணம், ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் நிறைவேற ஜெயலலிதாவின் சாதனை தொடர அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். கடைசி நேர வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை