வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

தினமலர்  தினமலர்
வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

பெங்களூரு: சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம் அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சசிக்கு சிறை:


கடந்த 21 ஆண்டு காலமாக நடந்த சொத்து குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14 ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு நானகு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உறுதிசெய்யப்பட்டது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். சுப்ரீம் கோட்டின் தீர்ப்பையடுத்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதுகாப்பு:


இதே வழக்கில் கடந்த 2014ல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது சிறை வளாகமே மிகுந்த பரபரப்புக்குள்ளானது. சிறைவளாகம் முன்பு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது நிலவிய பரபரப்பான சூழ்நிலையை சமாளிக்க கர்நாடகா அரசு நூற்றுக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியது.

நாதி இல்லை


ஜெயலலிதா சிறையில் இருந்த போது இருந்த நிலை மாறி, தற்போது சசிகலா சிறையில் வைக்கப்பட்ட பிறகு சிறைவளாகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு தான் மக்கள் உள்ளனர். அ.தி.மு.,க., வைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் பொதுமக்கள் யாரும் சசியை தேடி வரவில்லை.

கூடுதல் பாதுகாப்பு


சசி சிறையில் அடைக்கப்பட்டதும், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்று எண்ணிய கர்நாடகா போலீசார் பாதுகாப்பை அதிகபடுத்தியிருந்தனர். ஆனால், தற்போது சிறை பக்கம் மக்கள் யாரும் வராமல் இருந்தாலும் போலீசார் பாதுகாப்பு மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மூலக்கதை