நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள்...அகற்றப்படுமா! தமிழகத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள்...அகற்றப்படுமா! தமிழகத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு


தமிழகத்தை பின்பற்றி புதுச் சேரி மாநிலத்திலும், விவசாய நிலங்களை மலடாக்கும் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும்.
இந்தியாவில் 1950ம் ஆண்டு வறட்சியான பகுதிகளில் விறகுக் காகவும், விளை நிலத்தைச்சுற்றி வேலியாகவும் அமையும் என்ற நோக்கில், பரப்பப்பட்ட சீமைக் கருவேல மரங்கள், இன்றைக்கு ஒட்டுமொத்த நிலத்தடி நீரை காலி செய்யும் எமனாக மாறி விட்டது.
நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சி விடுவதால் மற்ற தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கிறது. அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியையே ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றன. அதோடு நஞ்சு மிகுந்த முட்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீருக்கு வேட்டு வைத்த, சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை அண்மை யில் உத்தரவிட்டது.ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தின் 13 மாவட்டங்களி லும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்தது. இப்பணிகளை வார விடுமுறை நாட்களில் அந்தந்த மாவட்ட நீதிபதி கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதன் எதிரொலியாக, தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பிலும், கருவேல மரங்கள் முழு வீச்சில் அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளி வளாகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தை போன்றே புதுச்சேரி மாநிலத்திலும் சீமை கருவேல மரங்கள் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கபளீகரம் செய்து வருகின்றன. வளம் நிறைந்த மண் வளத்தை மலடாக்கி வருகின்றன. ஆனால், அவற்றை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இன்னும் துவக்கப்படவில்லை.
காரைக்கால் விவசாய நிலங்களில் பரவலாக காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, வேளாண் துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்னர். இருந்த போதிலும் இதுவரை உருப்படியான எந்த வேலையும் துவங்கப்பட வில்லை. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வேலிக்காத்தான் என அறியப்படும் இந்த முட்செடியின் அறிவியல் பெயர் 'ப்ரோசோபிச் சூலிப்லோரா'. இது தென் அமெரிக்கா, மெக்சிகோ, கரிபியன் தீவுகளை சேர்ந்தவை. தற்போது ஆசிய, ஆஸ்திரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் ஆக்கிரமிப்பாகி விட்டது.
இந்த முள்மரம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, வளர்கிறது. உறுதியான பக்க வேர்களை கொண்டிருப்பதால் மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்கு செல்வதை தடுக்கிறது.
புதுச்சேரி சிறிய மாநிலம். ஆதார், ரொக்கமில்லா பரிவார்த்தனை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு என, எந்த திட்டத்திற்கு முன்னோடியாக உள்ளது. எனவே, அரசு மனது வைத்தால், புதுச்சேரி மாநிலத்திலும் மண்ணை மலடாக்கும் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்றுவது சாத்தியமே.மத்திய அரசின் நிதியில் நடக்கும் நுாறு நாள் வேலைத் திட்டங்களில் குளம் துார் வாருதலை தவிர உருப்படியான எந்த பணிகளும் நடப்பதில்லை. எனவே, கிராமங்களில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் இத்தகைய விஷச்செடிகளை அகற்றும் பணியிலாவது ஈடுபடுத்தலாம்.இந்த மரங்களை ஒழித்தாலே, நிலத்தடி நீரை பல மடங்கு சேமிக்க முடியும்.
இருமடங்கு அபராதம் விதிக்கலாம்திண்டுக்கல் நகராட்சி, தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்பும், அகற்றாவிட்டால் மாநகராட்சியில் இருந்து அகற்றிவிட்டு அதற்கான செலவு தொகையை இரண்டு மடங்காக உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என, எச்சரித்துள்ளது. இந்த நடைமுறையை புதுச்சேரியில் உள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பின்பற்றலாம்.


-நமது சிறப்பு நிருபர்-

மூலக்கதை