சட்டசபையில் இன்று நடக்கிறது பலப்பரீட்சை அங்கே ஓட்டு: இங்கே வேட்டு!கோவை எம்.எல்.ஏ.,க்கள் 'இறுதி' முடிவு என்ன?

தினமலர்  தினமலர்
சட்டசபையில் இன்று நடக்கிறது பலப்பரீட்சை அங்கே ஓட்டு: இங்கே வேட்டு!கோவை எம்.எல்.ஏ.,க்கள் இறுதி முடிவு என்ன?

தமிழக சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நடக்கவுள்ள வாக்கெடுப்பில், தங்களது தொகுதி எம்.எல்.ஏ., எடுக்கும் முடிவை அறிந்து கொள்ள, கோவை மக்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இன்று சட்டசபையில் நடக்கும் பலப்பரீட்சை தான், அடுத்த நான்காண்டுகளுக்கு தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிறது. ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலாவின், 'பினாமி'யாகக் கருதப்படும் இடைப்பாடி பழனிச்சாமி, முதல்வராக தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்பட்சத்தில், மன்னார்குடி கும்பலின் ஆதிக்கம் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி, தமிழகமே ஊழல் மாநிலமாக மாறுமென்ற அச்சம், மக்களிடம் பரவியுள்ளது.
எங்கெங்கும் இதே பேச்சு!குறிப்பாக, கொங்கு மண்டலப் பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில், சசிகலா தலைமைக்கும், அவரது ஆதரவு பெற்ற அரசுக்கும் கடுமையான எதிர்ப்பு உள்ளது. டீக்கடை, பேக்கரி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பஸ்கள் என எங்கெங்கும் பொது மக்களின் பேச்சில், இந்த அரசு தோற்க வேண்டுமென்ற விருப்பம் வெளிப்படுவதைப் பார்க்கவும், கேட்கவும் முடிகிறது.
கொங்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்னோடியாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,க்கள் இருவர் எடுத்த முடிவு, மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. பணத்துக்கு விலை போகாமல், அவர்கள் எடுத்த முடிவை, கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, சாதாரண பொது மக்களும் வாழ்த்தி வரவேற்கின்றனர்.
ஜெ., முதல்வராவதற்கு வாக்குகளை வாரி வழங்கிய கொங்கு மண்டல மக்கள், அவரால் நியமிக்கப்பட்ட பன்னீர் செல்வத்தை பதவியிறக்கம் செய்ததை விரும்பவில்லை; அதனால் தான், கொங்கு மண்ணைச் சேர்ந்த ஒருவர், முதல்வரானதையும் கொண்டாடவில்லை. மாறாக, சசிகலா அணிக்கு ஆதரவாக இருக்கும் தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,க்களும், பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
வேகமாய் பரவுது யூகம்!ஆனால், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களின் அலுவலகம் மற்றும் வீட்டுக்குச் சென்று, தங்களது கருத்தை வலியுறுத்தியுள்ளனர். கூவத்துார் ரிசார்ட்ஸ்சில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் சிலரது வீடுகளில், சுப, துக்க காரியங்கள் நடந்தும் யாருமே எட்டிப்பார்க்கவில்லை; ஒரு சில பிரச்னைகளுக்காக, எம்.எல்.ஏ., உதவியை நாடும் பொது மக்கள், அவர்களைப் பிடிக்கவே முடியாமல், பெரும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
'தொடர்பு எல்லைக்கு அப்பால்' எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து இருப்பது, அவர்களைப் பற்றிய பல்வேறு யூகங்கள் பரவவும் முக்கியக் காரணமாகவுள்ளது. எம்.எல்.ஏ., ஒவ்வொருவருக்கும் இரண்டு கிலோ தங்கம், ஐந்து கோடி ரூபாய் என்று பேரம் நடந்திருப்பதாக, மக்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை யாருக்கும் தெரியாவிட்டாலும், சமூகவலைதளங்களில் இது தொடர்பான தகவல், காட்டுத்தீயாக பரப்பப்படுகிறது.
மக்களின் கோபத்தை இந்த தகவல்கள், இரட்டிப்பாக்கி உள்ளன. இன்று, சட்டசபையில் நடக்கும் பலப்பரீட்சையில், கோவை மாவட்டத்திலுள்ள ஏழு எம்.எல்.ஏ.,க்கள் எதிராக வாக்களித்தாலே, பழனிச்சாமி தலைமையிலான அரசு தோற்று விடும். பொது மக்கள் மத்தியிலும், மதிப்பு அதிகரிக்கும். இதைச் செய்யாதபட்சத்தில், இன்றைக்கு ஆதாயம் கிடைத்தாலும், தொகுதிக்கு வரும்போது, கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஏனெனில், பழனிச்சாமியை ஆதரித்து வாக்களிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளை, வரும் ஞாயிறன்று முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்துவோம் என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த எம்.எல்.ஏ.,க்கள், சில நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தாலும், முன்பு போல ஊருக்குள் சுதந்திரமாக வலம் வருவது, அத்தனை எளிதான விஷயமாகத் தெரியவில்லை.
என்ன செய்வார்கள்?
பொது மக்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும், இதே எதிர்பார்ப்பே நிலவுகிறது. டாஸ்மாக் பார் மாமூல் வாங்கும் வார்டு நிர்வாகிகள், அரசு இடங்களை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் நடத்துவோர், கூட்டுறவு சங்க நிர்வாகியாக இருப்போர் என கட்சியால் ஏதாவது ஒரு வகையில் வருவாய் பார்ப்போர் மட்டுமே, சசிகலா தரப்பை ஆதரிக்கின்றனர். பெரும்பான்மை தொண்டர்கள், இவர்களை எதிர்க்கின்றனர்.
தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள், பொது மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் கோவை எம்.எல்.ஏ.,க்கள் பிரதிபலிப்பார்களா அல்லது தங்களது சுயநலத்துக்காக வேறு முடிவை எடுப்பார்களா என்பது, இன்று மதியத்துக்குள் தெரிந்து விடும். அதன் விளைவுகளை, இந்த எம்.எல்.ஏ.,க்கள் தெரிந்து கொள்வதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம்.


மாறவும் வாய்ப்புண்டு!
கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கூவத்துாரில் தங்கியுள்ள நம்மூர் எம்.எல்.ஏ.,க் களுக்கு, இங்குள்ள மக்களின் மனநிலை குறித்த தகவல்கள் சென்று கொண்டே இருக்கின்றன; ஆனால், எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில், அவர்கள் இருக்கின்றனர். பணம், பதவி, பாதுகாப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்; இன்று நடக்கும் வாக்கெடுப்பில், ஓரிருவர் மாறி வாக்களிக்க வாய்ப்புண்டு' என்றார்.


-நமது நிருபர்-

மூலக்கதை