வன விலங்குகளின் தாகத்தை தணிக்க...தண்ணீர் திறப்பு...!முதுமலை புலிகள் காப்பக கோரிக்கை ஏற்பு

தினமலர்  தினமலர்
வன விலங்குகளின் தாகத்தை தணிக்க...தண்ணீர் திறப்பு...!முதுமலை புலிகள் காப்பக கோரிக்கை ஏற்பு

ஊட்டி:முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகளின் தாகம் தணிக்க, காமராஜ சாகர் அணை நீர், நேற்று முன்தினம் மாலை திறந்து விடப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்குகள் உட்பட பல்வேறு வன விலங்குகள், பறவையினங்கள் என, பலவகை உயிரினங்கள் உள்ளன. முதுமலை தெப்பக்காடில் வளர்ப்பு யானைகளும் உள்ளன.
கடந்தாண்டு, பருவமழை பொய்த்ததால் மழை குறைந்தது; இதனால், வறட்சி அதிகரித்து, வனங்களில், இயற்கையாக உள்ள நீர் நிலைகள் கூட வறண்டன. வனங்களில், விலங்குகளின் தாகம் தணிக்க ஆங்காங்கே செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த நீர் தேக்க தொட்டிகளும் வறண்டன.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வந்த நிலையில், மழையின்மையால், விவசாய நிலங்கள் நீரின்றி காய்ந்தன.
வனங்களில் ஆங்காங்கே உள்ள சிறு, சிறு குட்டைகளில், சேறு, சகதியும் நிறைந்த, சுகாதாரமற்ற நீர் மட்டுமே உள்ளது. அதை குடிக்கும் விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.இந்நிலையில், மின் வாரியத்தின் மின் உற்பத்தி பிரிவு கட்டுப்பாட்டில், ஊட்டி அருகேயுள்ள காமராஜர் சாகர் அணையில் இருந்து நீரை திறந்து விட வேண்டும் என, முதுமலை புலிகள் காப்பகம் சார்பில், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கோரிக்கையை ஏற்ற மின் வாரியம், நேற்று முன்தினம் மாலை முதல், காமராஜர் சாகர் அணையில் இருந்து, முதுமலை பகுதிக்கு நீரை திறந்துவிட்டது.மின் வாரிய (உற்பத்தி) செயற் பொறியாளர் ராமராஜனிடம் கேட்ட போது, “முதுமலையில் உள்ள வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, காமராஜர் சாகர் அணையில் இருந்து ஏற்கனவே, நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது, வறட்சி அதிகரித்துள்ளதால், முதுமலை புலிகள் காப்பகத்தின் கோரிக்கையை ஏற்று, நேற்று முன்தினம் மாலை முதல், கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது,” என்றார்.இந்நீர் மாயாறு, சிங்காரா ஆற்றின் வழியாக, முதுமலை புலிகள் காப்பகம், சிறியூர், ஆணைக்கட்டி, வாழைத்தோட்டம், பொக்காபுரம் கிராமங்கள் வழியாக செல்லும். இதன் மூலம் வன விலங்குகளின் நீர் தேவை ஓரளவு பூர்த்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், காமராஜர் சாகர் அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவை, வடக்கு வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜ்மோகன் பார்வையிட்ட பின், கூறுகையில், “இந்த நீர் நாளை (இன்று) மாலைக்குள், சீகூர் வனப்பகுதி வழியாக சென்று சேரும். இதன் மூலம் வன விலங்குகளின் நீர் தேவை பூர்த்தியாகும் என, எதிர்பார்க்கிறோம். இந்த நீரை, வழிமறித்து, விவசாயம் உட்பட பிற பணிகளுக்கு பயன்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது; அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

மூலக்கதை