தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி திட்டம் - அதிர்ச்சி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி திட்டம்  அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்- டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி மொய்னுதீன் தமிழ்நாடு, கேரளா உள்பட தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே கனகமலை வனப்பகுதியில் ஐஎஸ் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என தெரியவந்தது.

பின்னர் இவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டனர். என்ஐஏ நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

இந்த கும்பல் தான் இந்தியாவில் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்ததும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர்களுடன் தொடர்புடைய கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த இப்னுஅப்துல்லா என்பவர் சவுதி அரேபியாவில் இருப்பது தெரியவந்தது.

இவர் தான் இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இப்னுஅப்துல்லாவை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர்.

அவரை பிடிக்க அனைத்து முக்கிய விமான நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. விசாரணையில் அவரது உண்மையான பெயர் மொய்னுதீன் என தெரியவந்தது.

இந்த நிலையில் மொய்னுதீன் சவுதியில் இருந்து இந்தியா வர விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் டெல்லிக்கு வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லி வந்த மொய்னுதீனை விமான நிலையத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு, கேரளா உள்பட தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இவர் இந்தியாவில் பல பகுதிகளில் பல பெயர்களில் வசித்து வந்துள்ளார்.

கடந்த வருடம் கேரளாவை சேர்ந்த 18க்கும் மேற்பட்டோர் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தனர். அவர்கள் குறித்த விவரங்களையும் மொய்னுதீன் தெரிந்து வைத்திருக்கிறார்.

மொய்னுதீனிடம் விசாரணை நடத்தினால் கேரளாவை சேர்ந்த ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை