பாதாள சாக்கடை திட்டப் பணி... இழுபறி 1700 இணைப்பு மட்டுமே உள்ளது

தினமலர்  தினமலர்
பாதாள சாக்கடை திட்டப் பணி... இழுபறி 1700 இணைப்பு மட்டுமே உள்ளது

கடலுார் : கடலுார் நகரில் 60 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு ஆண்டை கடந்த பின்பும் இதுவரை 1700 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டம் முழு அளவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடலுார் நகரில் பெருகி வரும் கொசுத் தொல்லைக்கும் நகரில் வழிந்தோடும் சாக்கடை நீரை கட்டுப்படுத்தவும் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. கடலுார் நகரில் உள்ள 45 வார்டுகளில் 35 வார்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதியுள்ள 10 வார்டுகளில் இத்திட்டம் 2வது கட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு தடைகளைக் கடந்து கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளை இணைத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் நகர பகுதியில் இருந்து 16 ஆயிரம் பாதாள சாக்கடைத்திட்ட இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த திட்டம் துவங்கி ஒரு ஆண்டு காலம் நிறைடைந்த பின்னரும் இதுவரை 1700 இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 60 கோடி ரூபாய் செலவு செய்து முடிக்கப்பட்ட இத்திட்டம் மக்களுக்கு பயன்படாத நிலை உள்ளது. பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகள் நகர சாலை போடும்போது முழுவதுமாக மூடிவிட்டனர். சில இடங்களில் சிமென்ட் சாலை போட்ட இடங்களிலும் ஆளிறங்கும் குழிகள் காணாமல் அதிகாரிகள் திகைத்து வருகின்றனர். சரவணா நகர் உட்பட சில இடங்களில் சாலைக்குக் கீழே 2 முதல் 3 அடி ஆழத்தில் இருப்பதால் இக்குழிகளை மேலே கொண்டு வரவேண்டிய பணிகள் நிலுவையில் உள்ளன. முதுநகர் தேசிய நெடுஞ்சாலை தற்போது 18 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. ஆனால், அந்த சாலையில் உள்ள ஆளிறங்கும் குழிகள் இதுவரை சாலை மட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நகர மக்கள் பெரும்பாலானோர் இணைப்பு கொடுக்க முன்வருவதில்லை. இணைப்பு கொடுப்பதற்காக நகராட்சிக்கு 7000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். இது தவிர ஒப்பந்ததாரருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே, நகராட்சியும் தன் பங்கிற்கு, நகராட்சி செலுத்த வேண்டிய முன் வைப்புத் தொகையை செலுத்திவிட்டு பயனாளிகளை பணிகள் முடித்துக் கொள்ளலாம் என ஆங்காங்கே அறிவிப்பு பேனர்களை வைத்துள்ளது. இருப்பினும் பாதாள சாக்கடைத்திட்டம் முழு வீச்சில் செயல்படாதாதல் கொசுத்தொல்லை, பல்வேறு தொற்று நோய்கள் அதிகரித்து வருகின்றன.

மூலக்கதை