நெடுஞ்சாலையில் காட்டெருமை கூட்டம்உஷார்! காரணம் குறித்து ஆராய வேண்டியது அவசியம்

தினமலர்  தினமலர்

ஊட்டி ;'ஊட்டி -- குன்னுார் சாலையில், காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வனங்களில் வாழும் காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உட்பட விலங்குகள் அவ்வப்போது, உணவு, நீர் தேடி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும், இதுவரை இல்லாத வகையில், புதிய இடங்களில் தென்படும் வன விலங்குகளின் 'விசிட்' மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நெடுஞ்சாலையில் உஷார்
இதில், ஊட்டி -- - குன்னுார் சாலையில் சமீபகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதேபோல, அருவங்காடு, கோபாலபுரம் பகுதிகளில், காட்டெருமைகள் நடமாட்டம் என்பது, அப்பகுதி மக்களின் பார்வைக்கு புதிதாக உள்ளது.உறவுகளை தேடி...இந்நிலையில், நேற்று முன்தினம், மந்தாடா பகுதியில் இரு காட்டெருமைகள் சண்டையிட்டு, கொம்புகள் சிக்கிக் கொண்ட நிலையில், சாலையில் விழுந்து, பல மணி நேர போராட்டத்துக்கு பின் பரிதாபமாக பலியாகின. அவற்றை வனத்துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள வனத்தை ஒட்டிய தனியார் காடுகளில் இருந்து வந்த பெரிய காட்டெருமை, உயிருக்கு போராடி கொண்டிருந்த 'உறவுகளை' நோக்கி சென்றது. அவற்றை வனத்துறையினர் விரட்டினர்.இருப்பினும், தனது வசிப்பிடத்தில் நின்றபடி, அந்த காட்டெருமை நடந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தது.
ஆய்வு அவசியம்மக்கள் கூறியதாவது:இங்குள்ள வனப்பகுதியில், காட்டேஜ் கட்டுமானப் பணிக்காக, தனியாரால் அமைக்கப்பட்ட சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டது. அச்சாலை வழியாக தான், காட்டெருமைகள் சாலைக்கு வந்து செல்கின்றன. இதே போன்று, ஊட்டி -- குன்னுார் சாலையின் பல இடங்களில் வனத்தை ஒட்டிய, தனியார் வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்களில் காட்டேஜ் அமைக்க மரங்கள் வெட்டப்படுகின்றன; சாலைகள் தோண்டப்படுகின்றன.
காட்டெருமைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வனப்பகுதிகளில் இருந்து, காட்டெருமைகள் வருவதற்கான காரணம் குறித்தும், அவற்றின் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும், ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.தேவை மருத்துவர்கள்...நீலகிரியில் வடக்கு, தெற்கு மற்றும் கூடலுார் என, மூன்று வனக்கோட்டங்கள் இருந்த போதும், முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும், ஒரேயொரு கால்நடை மருத்துவர் உள்ளார். நேற்று முன்தினம் கொம்புகள் சிக்கி, உயிரிருக்கு போராடிய காட்டெருமைகளை மீட்க, பல மணி நேர காத்திருப்புக்கு பின், கேத்தி கால்நடை மருத்துவர் வந்து, மயக்க ஊசி செலுத்தினார். 'விலங்குகளின் இனப்பெருக்கத்தால், வரும் நாட்களில், இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்' என, வனத்துறையினரே கூறுகின்றனர். எனவே, ஒவ்வொரு வனக் கோட்ட அளவிலும் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டியது அவசியம். இக்கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் இருப்பதும், குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை