நெடுஞ்சாலையில் தொடர் வேகத்தடையால்...திணறல்!அறிவிப்பு இல்லாததால் மக்கள் அலறல்

தினமலர்  தினமலர்

பொள்ளாச்சி :பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, மூன்று இடங்களில், 15 திட்டுக்களுடன் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வைக்காததால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பள்ளி, கல்லுாரிகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சின்னாம்பாளையம் அருகில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதனால், உடுமலை ரோட்டில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
அதற்கேற்ப ரோடு விரிவுபடுத்தப்படாததால், அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிப்பதும், விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், அதிகளவில் விபத்து ஏற்படும் பகுதிகளை, தேசிய நெடுஞ்சாலைத்துறை 'பிளாக் ஸ்பாட்' பிரிவில் அறிவித்துள்ளது.
அதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைப்படி, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, விபத்து ஏற்படும் பகுதிகளில் தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டு வருகிறது. திப்பம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, பொள்ளாச்சியில் தேர்நிலை ஆகிய இடங்களில், 15 திட்டுக்களுடன் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளதற்காக அந்த இடங்களில் எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வைக்கவில்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தடை மீது ஏறியதும் 'தடதடவென' உதறுவதால், உடனே வேகத்தை கட்டுப்படுத்துகின்றனர். இதனை அறியாமல், பின்தொடர்ந்து வரும் வாகனம் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. தேர்நிலை பகுதியில் வேகத்தடை அமைத்துள்ள இடத்துக்கு முன்பாக பல்லடம் ரோடும், குடியிருப்பு பகுதி ரோடுகளும், வேகத்தடையை கடந்ததும் கோட்டூர் ரோட்டிற்கான பை - பாஸ் ரோடும் குறுக்கிடுகின்றது.
வேகத்தடை அருகே வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதாலும், விபத்து ஏற்படுவதாலும் அனைத்து ரோடுகளிலும் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.இதேபோன்று, ஊஞ்சவேலாம்பட்டியில் மேடான பகுதியில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதி ரோடுகளும், தாராபுரம் ரோடு, எஸ்.சந்திராபுரம் ரோடு அதே பகுதியில் சந்திப்பதால், அங்கும் சிக்கல் நிலவுகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி, விபத்தை தவிர்க்க அமைக்கப்பட்ட புதிய வேகத்தடைகளால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டுனர்கள் கோரிக்கையாக உள்ளது.தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விபத்துகளின் அடிப்படையில் 'பிளாக் ஸ்பாட்'கள் குறிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைத்து, டிரைவர்கள் எச்சரிக்கையாக வாகனம் ஓட்ட வேண்டும் என்பதற்காக, 15 திட்டுக்களுடன் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், வாகன ஓட்டுனர்களுக்கு சிரமமாக இருக்கும். வேகத்தடை இருப்பது மனதில் பதிந்து விட்டால், பிரச்னை இருக்காது. வேகத்தடை இருக்கும் இடத்தில், வாகனங்கள் நின்று, மெதுவாக செல்வதால் காலதாமதம் ஏற்படலாம். ஆனால், விபத்துக்கள் தவிர்க்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்றனர்.

மூலக்கதை