கோவைக்கு திட்டங்களை ஜெ., அறிவித்து...வருஷம் மூணாச்சு: வாக்குறுதி என்னாச்சு?நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு!

தினமலர்  தினமலர்
கோவைக்கு திட்டங்களை ஜெ., அறிவித்து...வருஷம் மூணாச்சு: வாக்குறுதி என்னாச்சு?நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு!

கோவை நகரின் வளர்ச்சிக்கென மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜெ., அறிவித்த முக்கிய திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை கழகத்தில் நிதி பெறுவதற்கு அதிகாரிகள் போராடுகின்றனர்.
கடந்த, 2014ல், கோவை மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்தது; அதற்காக, பிரசாரத்துக்கு கோவை வந்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதற்கு முன்பே, 2,378 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இவற்றில், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம், வெள்ளலுாரில் 67 ஏக்கரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், லாரிப்பேட்டை அமைக்கும் திட்டம் ஆகியவை முக்கியமானவை.
அற்புதமான திட்டங்கள்...சங்கனுார் பள்ளத்தில் நீர் வழிப்பாதையை துார்வாரி, அரை வட்டப்பாதை அமைப்பது; காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் திவான் பகதுார் ரோடு, டவுன்ஹாலில், தானியங்கி 'மல்டி லெவல் பார்க்கிங்' திட்டம்; பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம் என எல்லாமே அற்புதமான திட்டங்களாக இருந்தன.
ஜெ., வாக்குறுதியை நம்பி, அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெற வைத்தனர். அதன் பின்பு, கடந்த ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாநகராட்சியில் ஒரு தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றது. ஆனால், அறிவித்த திட்டங்களில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கான மாற்று வீடுகள் கட்டும் திட்டம் மட்டுமே, ஓரளவுக்கு நடந்துள்ளது.
ஏழு நாட்களும், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் 'டெண்டர்' கோரிய இரண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் பங்கேற்றன. 25 ஆண்டுகளுக்கு சொந்த பொறுப்பில் பராமரிப்பதற்கு, பெருந்தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதால், நிபந்தனைகளுக்கான ஆவணங்கள் தாக்கல் செய்ய, அந்நிறுவனங்கள் வாய்ப்பு கேட்டுள்ளன; அதை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
ஜெர்மன் நிதியுதவி...
'மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. 'டெண்டர்' கோரும் பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் லாரிப்பேட்டை அமைப்பதற்கான திட்ட வரைவு மீண்டும் மீண்டும் திருத்தம் செய்யப்படுகிறது. சங்கனுார் பள்ளத்தில் நீர்வழிப்பாதையை துார்வாரி, அரைவட்ட சாலை ஏற்படுத்தும் திட்டத்தை, ஜெர்மன் நிதியுதவியில் செயல்படுத்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் கடனுதவி செய்ய ஜெர்மன் முன்வந்தது. நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் அறிவிக்காததால், இத்திட்டம் நிலுவையில் உள்ளது. அதனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை கழகத்தில், ஒதுக்கீடு பெற்று, செயல்படுத்த ஆலோசனை நடந்து வருகிறது.
பில்லுார் மூன்றாவது திட்டத்தில், பெரிய கோம்பை மற்றும் கட்டன் மலையில், குகை வழிப்பாதை அமைக்க, அரசு அனுமதி கொடுக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம், மத்திய அரசின், 'அம்ருட்' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், அ.தி.மு.க., அரசு, திட்டங்களை மட்டும் அறிவித்து விட்டு, நிதியை ஒதுக்கீடு செய்யவே இல்லை.
வாய்ச்சொல்லில் வீரர்கள்...
திட்டத்தை அறிவித்த ஜெ., இப்போது உயிருடன் இல்லை; அவருக்குப் பின் வந்த முதல்வரும், பதவி இழந்து விட்டார். புதிய முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவரும், பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பது தெரியவில்லை. அப்படியே நிரூபித்தாலும், இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது சந்தேகமே.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கைவசம் நிதி இல்லாமலேயே, ஏகப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. அனைத்து திட்டங்களுக்கும் திட்ட வரைவு தயார் நிலையில் உள்ளது. பல்வேறு வழிகளில் நிதி திரட்ட முயற்சிக்கிறோம். இவ்வாண்டு இறுதிக்குள், பெரும்பாலான திட்டங்களை துவக்கி விடுவோம்' என, நம்பிக்கையுடன் தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளாக, இதே நம்பிக்கை வார்த்தைகள் தான் தரப்படுகின்றன; அவை செயல்வடிவமாகும் நாள் எந்நாளோ?--நமது நிருபர்-

மூலக்கதை