டெல்லி சென்றார் மைத்ரேயன் - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி சென்றார் மைத்ரேயன்  தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார்

புதுடெல்லி- சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தற்போது பெங்களூரு சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் ஓ. பன்னீர் செல்வம்  தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கே. பி. முனுசாமி, பி. எச். பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கூடினர்.

அவர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்பான சூழலில், பன்னீர்செல்வம் ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி இன்று காலை டெல்லி புறப்பட்டு  சென்றுள்ளார். மாலையில் அவர் தேர்தல் ஆணையம் சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்கவிருக்கிறார்.

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம்,  பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது குறித்தும் அவர் புகார் அளிப்பார் என்று தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி விட்டால் தங்கள் அணியின் பலம் சரிந்து விடும் என்பதை உணர்ந்த ஓபிஎஸ் அணியினர் தற்போது கட்சியில் தொண்டர்கள் பலம் தங்களுக்கு உள்ளதாக கூறி, தேர்தல் ஆணையத்தின் மூலம் எதிர்க்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் வெறிச்சோடி கிடந்த பன்னீர்செல்வத்தின் வீட்டில் பிற்பகலில் தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.


 

.

மூலக்கதை