தமிழகத்தில் இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜெயிலில் இருந்து நடத்தப்படும் அரசு தமிழர்களுக்கு பாராட்டு: கட்ஜூ கிண்டல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜெயிலில் இருந்து நடத்தப்படும் அரசு தமிழர்களுக்கு பாராட்டு: கட்ஜூ கிண்டல்

புதுடெல்லி- ‘‘தமிழகத்தில் இன்னும் 4 ஆண்டுகளுக்கு சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஊழல் குற்றவாளியின் பின்னணியில் செயல்படும் அரசுதான். தமிழர்களே, உங்களுக்கு பாராட்டுகள். . . ’’ என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கிண்டலடித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ அவ்வப்போது ஏடாகூடமாக எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அதிலும் தமிழக அரசியல் பற்றியும் அவ்வப்போது கடுமையாக விமர்சிப்பார்.

அவர் தனது இணையதள பிளாக்கில், ‘ஜெயிலில் இருந்து நடத்தப்படும் ஒரு அரசு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு: ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனது அக்கா மகன் டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்து விட்டு சிறைக்கு சென்றுள்ளார் சசிகலா. இப்போது சசிகலாவின் கைக்கூலி எடப்பாடி பழனிசாமிதான் உங்கள் முதலமைச்சர்.

எனவே, தமிழர்களே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு இன்னும் 4 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றவாளியின் பின்னணியில் நடைபெறும் அரசுதான்.

இந்த தனிப்பெருமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். பழனிச்சாமி விசுவாசத்துடன் சிறையில் இருந்து உத்தரவுகளை பெற்றே ஆட்சி நடத்துவார்.

கவலைப்படாதீர்கள். ஏற்கனவே இதே போல் வேறொரு மாநிலத்தில் முன்மாதிரியாக நடந்துள்ளது.

இவ்வாறு கட்ஜூ கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு  செய்துள்ளார்.

அதன் விவரம்: தமிழக அரசியல் குறித்து எதுவும் எழுதக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். ஏனெனில், நான் எழுதுவதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

ஆனால் என் பேஸ்புக் பக்கத்தில் தமிழர்கள் பலரும் என்னை எழுதச் சொன்னதால், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து என் கருத்தை பதிவு செய்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் கும்பலை சேர்ந்தவர்.

பன்னீர்செல்வத்துக்கு போதுமான எம். எல். ஏ. க்கள் ஆதரவு இல்லை. அவரும் சசிகலாவின் கும்பலில் இருந்தவர்தான்.

பன்னீர்செல்வம் மீதும் புகார்கள் உள்ளன. ஆனாலும், தன்னை ஒரு புனிதராக காட்டிக்  கொள்ளும் திடீர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

இந்த 2 பேருமே வேண்டாம். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆர். நடராஜை முதல்வராக்கி விடலாம்.

நான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது சென்னை போலீஸ் கமிஷனராக நடராஜ் நன்றாக பணியாற்றினார். அவர் நேர்மையான அதிகாரி.   நடராஜை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு கட்ஜூ கூறியிருந்தார்.

.

மூலக்கதை