வங்கதேசம் வழியாக வரும் புதிய ரூ.2000 கள்ள நோட்டுகள் - மத்திய அரசு அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கதேசம் வழியாக வரும் புதிய ரூ.2000 கள்ள நோட்டுகள்  மத்திய அரசு அதிர்ச்சி

புதுடெல்லி- மேற்கு வங்கத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை ஒரிஜனல் நோட்டுகள் போல் இருப்பதால் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ரூ. 2000 நோட்டுகள் வெளியிடப்பட்ட போது, இதைப் போல் கள்ள நோட்டுகளை எளிதில் தயாரிக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்று மத்திய அரசால் கூறப்பட்டது.

எனினும், சில நாட்களில் கள்ள நோட்டுகள் வெளிவந்தன. ஆனால், அவை ஒரிஜனல் நோட்டுகளின் கலர் ஜெராக்ஸ் என்று கண்டறியப்பட்டதால் அத்துடன் பிரச்னை முடிந்தது.

இந்நிலையில், தற்போது வங்கதேசம் வழியாக புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், மலாடா பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல் கிடைத்தது.

இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள இந்த மார்க்கெட் பகுதிக்கு சென்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, கள்ளநோட்டுகளை மாற்றிக் கொண்டிருந்த 21 வயது வாலிபரை கையும்களவுமாக பிடித்தனர்.

அவரிடம் புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டை போன்று 3 நோட்டுகளை வைத்திருந்தார். கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த வீரர்கள், வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின்படி, மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள் யாருக்கும் சந்தேகம் வராதபடி, அச்சு அசலாக ஒரிஜனல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை போலிருந்தது குறிப்பிடத்தக்கது. கரன்சி வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ. 2000, ரூ. 500 நோட்டுகள் போன்ற கள்ளநோட்டுகளை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் தீவிரவாதிகள் தயாரித்து இந்தியாவுக்குள் அனுப்புவதாக தெரிய வந்துள்ளது.

இது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியா-வங்கதேச எல்லை வழியாக கள்ளநோட்டுகள் வருவதை தடுக்க அங்கு எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியிலும், அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை